சட்டவிரோத அந்நியர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும்!

சட்டவிரோத அந்நியர்களுக்கு உணவும் உறைவிடமும் அளிப்பது அரசின் கடமையென்றும் அதனை அரசு சாரா நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது அறிவீனம் என்றும் சுஹாகாம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பேசிய சுகாகாமின் ஆணையர் மா வெங் குவாய், சட்டவிரோத அந்நியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பதும் அவற்றைத் தீர்க்க உதவுவதும் அரசு சாரா இயக்கங்களின் (என்ஜிஓ) கடமையென்று அவர் குறிப்பிட்டார். இதனை அவை சரியாகவே செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். போதுமான நிதியில்லாமல் தவிக்கும் எஜிஓக்கள் சட்டவிரோத அந்நியர்களுக்கான உணவு, தங்குமிடச் செலவையும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றும், அது அரசின் கடப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் ஹம்ஷா ஸைனுடின் என்ஜி ஓக்கள் பற்றிக் குறிப்பிடும்போது, அவை சட்டவிரோத அந்நியர்களுக்குக் குரல் கொடுத்து வருவதால், ஹோட்டல் தரத்தில் அவர்களுக்கு உணவையும் தங்குமிட வசதியையும் அவையே செய்து கொடுக்க வேண்டுமென்று கடிந்து கொண்டிருந்தார். சட்டவிரோத அந்நியர்களுக்கு அரசு நாளொன்றுக்கு 30 ரிங்கிட் அளவில் செலவிடுவதாகவும் அச்செலவினை அவர்கள் தங்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பப்படும் வரை அரசு செலவிட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஹாகாமின் ஆணையர் ஜேரால்ட் ஜோசப், அந்நியர்களுக்கு அரசு செலவிடும் தொகை அதிகமானது. என்றாலும், அதனை நடப்பில் இருக்கும் அரசுதான் ஏற்க வேண்டியது கடமையென்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =