சட்டத்திற்குப் புறம்பாக பிறந்த முஸ்லிம் குழந்தை தகப்பனாரின் பெயரைக் கொண்டிருக்க முடியாது

0

ஒரு முஸ்லிம் குழந்தை திருமணத்திற்கு முன்பு தாயின் கர்ப்பத்தில் உருவாகியிருந்தால், அக்குழந்தை தகப்பனின் பெயரைக் கொண்டிருக்க முடியாது என்று கூட்டரசு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 4க்கு 3 என்ற பெரும்பான்மை முடிவில் எழுவர் கொண்ட அமர்வுக்கு தலைமையேற்ற முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் டத்தோ ரோஹானா யூசோப் இந்தத் தீர்ப்பை அளித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி முறையீட்டு நீதிமன்றம் சட்டத்திற்குப் புறம்பாகப் பிறந்த முஸ்லிம் குழந்தை தகப்பனின் பெயரைக் கொண்டிருக்கலாம் என்று தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து தேசியப் பதிவு இலாகா (என்ஆர்டி), அதன் தலைமை இயக்குனர் மற்றும் அரசாங்கம் முறையீடு செய்திருந்தன.
எனவே இவ்வழக்கில் தீர்ப்பளித்த ரோஹானா, சம்பந்தப் பட்ட வழக்கில் குழந்தையின் பிறப்புப் பத்திரத்தில் ‘பின் அப்துல்லா’வை நீக்குமாறு என்ஆர்டிக்கு உத்தரவு பிறப்பித்தார். ஜொகூர் மாநிலத்தில் அக்குழந்தை தனது பெற்றோரின் திருமணத்திற்குப் பிறகு 6 மாதத்திற்குள் பிறந்தது என்று கூறப்படுகிறது.
முஸ்லிம் ஷரியா சட்டத்தின் கீழ் அக்குழந்தை சட்டத்திற்குப் புறம்பானது என்று கருதப்படுகிறது.
‘பிடிஆர்ஏ’ எனப்படும் 1957 பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு மசோதா பிரிவு 13இன் படி அக்குழந்தையின் பிறப்புப் பத்திரத்தில் தகப்பனின் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று தேசியப் பதிவு இலாகாவிடம் அதன் பெற்றோர் மனு செய்திருந்தனர்.
அக்குழந்தை சட்டத்திற்குப் புறம்பாக பிறந்ததால் தகப்பனின் பெயரைப் பிறப்புப் பத்திரத்தில் சேர்க்க முடியாது என்று தேசியப் பதிவு இலாகா மறுத்துவிட்டது.
எனினும் 2017, மே 25இல் அப்பெற்றோரின் முறையீட்டு மனுவை செவிமடுத்த முறையீட்டு நீதிமன்றம், தகப்பனின் பெயரை பிறப்புப் பத்திரத்தில் சேர்க்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசியப் பதிவு இலாகா முறையீட்டு வழக்கைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here