சங்க காலத்தில் இலக்கிய தொண்டாற்றிய பெண்கள்

பண்டைய தமிழக பெண்கள் சமுதாயத்தில், கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என சித்தரிக்கப்படும் சங்ககாலத்தில், ஆண் புலவர்களுக்கு நிகராக பெண் புலவர்கள் இலக்கியத்தில் திறன் மிக்கவர்களாக இருந்துள்ளனர்.

பெண்களை குறிப்பிடும் வகையில் சங்ககாலப் புலவர்கள் பயன்படுத்திய சொற்கள் வியப்பைத் தருகின்றன. மாதர், பெண், நல்லார், ஆயிலை, அணியிழை, மென்சாயலர், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை போன்ற பெயர்கள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் எழுதிய பாடல்கள் அடங்கிய “அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநல் ஆற்றுப்படை, நற்றிணை” போன்ற இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்தே பெண் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

சங்ககாலக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி போன்றவற்றில் உள்ள பெண் பாத்திரங்களில் சிறப்புமிக்க பெண்கள் பற்றி கூறப்பட்டு உள்ளன. சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி போன்றவர் களின் வரலாறுகள் பல பெண்களின் மாண்புகளை உயர்த்துவதாக அமைந்திருக்கின்றன.

சங்ககாலத்தில் பெண்கள் கல்வியிலும் மேம்பட்டிருந்தனர். அவ்வையார், காக்கைப்பாடினியார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், மதுரை ஒலைக்கடையத்தார், காவற்பெண்டு, ஆதிமந்தி முதலானோர் புலவர்களாக இருந்து இலக்கியத் தொண்டாற்றி உள்ளனர்.

பெண் புலவர்கள் பாடல்களில் இருந்து, கல்வியில் சிறந்து விளங்கினார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் கல்வியில் சிறந்தோங்கியது மட்டுமல்லாமல் அரசவைகளிலும் அங்கம் வகித்தனர். ஆண் புலவர்களுக்கு நிகராகப் புலமை பெற்றிருந்தார்கள்.

அரசனுக்கு ஆலோசனைகள் கூறும் மந்திரியாகவும், தூது சென்று வெற்றியுடன் திரும்பும் மதிநுட்பம் கொண்ட தூதுவராகவும், புலமையுடன் சமுதாயத்தைத் திருத்தும் ஆளுமைத்திறன் கொண்டவராகவும் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்த ஜான்சி ராணியைப் போன்று பல வீரப் பெண்மணிகளும் வாழ்ந்துள்ளனர்.

நாட்டுப்பற்றுடைய வீரம் செறிந்த கருத்துகள் நிறைந்த பாடல்களைப் பாடியுள்ளார் பொன்முடியார். அவ்வை பாடிய பாடல்கள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவை, சிறந்த நீதி கூறுவதாக உள்ளன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு போன்றவைகளில் பெண்பால் புலவர்களின் பாடல்கள் மிகுதியாகும்.

“மங்கையராகப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா” என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பெண்களின் உயர்வை போற்றிப் பாடியுள்ளார். சங்ககாலத்தில் மட்டுமல்லாமலும் தற்காலத்திலும் கல்வி, மருத்துவம், சட்டம், பொறியியல் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தடம் பதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + twenty =