கோவிட்-19 நோயாளிகளைத் தத்தம் வீட்டிலேயே தனிமைப்படுத்துவதை விடுத்து அவர்களை பொதுப்போக்குவரத்தின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டுமென்று சிலாங்கூர், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு சிங்கப்பூரையும் பிரான்சையும் மலேசியா பின்பற்ற வேண்டுமென்று ஜசெக கட்சியைச் சேர்ந்தவரான ரிஷ்யகரன் வலியுறுத்தினார். கோவிட்-19 நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சிங்கப்பூர் மறுவடிவமைக்கப்பட்ட பேருந்துகளை பயன்படுத்திவரும் வேளையில், கோவிட்-19 நோயினால் திணறிக் கொண்டிருந்த தனது கிழக்குப் பிரதேசத்திலிருந்து மேற்குப் பிரதேசத்திற்கு நோயாளிகளைக் கொண்டு செல்ல சிறப்பு ரயில்களைப் பிரான்ஸ் பயன்படுத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு அரசாங்கம் தனது முழு வசதிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பயன்படுத்தப்படாமல் இருக்கும் அரசாங்க வேன்கள், பேருந்துகள் போன்றவற்றை நோயாளிகளைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தலாம். தேவை ஏற்படுத்தும் பட்சத்தில் ராணுவத்தினரைக் கூட அப்பணியில் ஈடுபடுத்தலாம்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவியிருக்கும் இக்காலகட்டத்தில் நோயாளிகளைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களை மட்டுமே சுகாதார அமைச்சு நம்பியிருக்கக்கூடாது. நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் காரணமாக முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் அது முழுவீச்சுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரிஷ்யகரன் அறிவுறுத்தினார்.
முன்அறிகுறி எதுவும் இல்லாமல் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அடையாளம் காணப்படும் நபர்கள், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு தத்தம் வீடுகளில் சில நாட்களுக்குச் சுயமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இரண்டு
தினங்களுக்கு முன்பு பரிந்துரைத்திருந்தார்.
மருத்துவ மனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாததே இதற்கு காரணமாகும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் உள்ளன என்றும் போக்குவரத்தில் ஏற்படும் தாமதத்தினால்தான் சம்பந்தப்பட்ட அத்தகைய நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் பின்னர் அவர் விளக்கமளித்தார். வீட்டின் தனியறையில் தங்களைச் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு பெரும்பாலான நோயாளிகளுக்கு வசதி கிடையாது என்றும் ரிஷ்யகரன் சுட்டிக் காட்டினார். அந்நியத் தொழிலாளர்கள் நெரிசல் மிக்க வீடுகளில் ஒன்றாக வசித்து வருகின்றனர். அதே நேரத்தில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது இயலாத ஒன்றாகும் என்றார் அவர்.