கோவிட்-19 காலத்தில் விவசாயத்தில் ஈடுபடுபட்ட இந்திய இளைஞர்கள்

தபா, ஜூன் 23-
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல வணிகங்கள் தங்கள் வருமானத்தை இழந்து தவிக்கின்றனர். அரசு அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பலருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை இழந்தவர்கள் வீட்டில் இருக்கும்போது எவ்வாறு வருமானத்தை ஈட்டுவது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அவ்வகையில், கோவிட்-19 தாக்கத்தால் வருமானத்தை இழந்த கம்போங் பகாங்கைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் ஒரு வீட்டில் 1,400 மிளகாய் செடிகளை நட்டு, வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
இந்த சவாலான நேரத்தில் விவசாயமும் உணவும் மக்களின் உயிர்நாடியாக மாறியுள்ளது. உற்பத்தி, சேவைகள் மற்றும் கட்டுமானம் போன்ற பிற துறைகள் கோவிட்-19 நோய்த்தொற்றால் தடைபட்டுள்ள நிலையில், உணவுத் துறை இன்னும் மக்களுக்கு உதவி வருகின்றது.
ஆகவே, அந்த ஐந்து இளைஞர்களும் விவசாயத்துறையில் முன்னேற பல முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.
“வருமானத்தை ஈட்ட விவசாயத் துறையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு இடத்தில் நாங்கள் மிளகாய் செடிகளை வளர்த்தோம்” என்று கணக்கியல் பட்டதாரி சுகேந்திரன் சிவராஜா, மின் மற்றும் மின்னணுவியல் பட்டம் பெற்ற ரவின் குமார் சந்தனசாமி ஆகியோர் கூறினர்.
வர்த்தக பட்டதாரி தமிலரசன் பரஞ்சோதி கூறுகையில், “எங்கள் 105 நாள் கூட்டு முயற்சியின் விளைவாக, தற்போது 300 கிலோ மிளகாய் விற்க முடிந்தது” என்றார்.
“மிளகாய் வளர்ப்பதற்கு நவீன விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். 700 பாலி பைகளில் 2 தண்டுகளில் 1,400 மிளகாய் செடிகளை நட்டோம். நவீன நடவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலைகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதிலும், பயிரிடுவதிலும் நாங்கள் இப்போது ஈடுப்பட்டு வருகின்றோம். மனிதவளத் துறையில் படித்து அனுபவம் பெற்ற நாங்கள், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்த விவசாயத் திட்டத்திற்காக அயராது உழைத்தோம். இதன் விளைவாக, நாங்கள் தரமான மிளகாய்களை உற்பத்தி செய்து வருகின்றோம். ஒரு செடியில் அரை கிலோ மிளகாயை விளைச்சல் செய்து வருகின்றோம்” என்றனர் அந்த இளைஞர்கள்.
“மேலும், நாங்கள் ‘‘Fresh Chilli Village Tapah’’ என்ற நிறுவனத்தை அமைத்து, எங்கள் வணிகத்தை ஆரம்பித்தோம். முரளி ராமச்சந்திரன் மற்றும் புவிஸ் பாலசிங்கம் மேலும் கூறுகையில், “நாங்கள் மிளகாயை தபா மத்திய சந்தை, லங்காவி, தெலுக் இந்தான் மட்டுமல்லாமல், கோலாலம்பூருக்கும் தேவைக்கேற்ப ஏற்றுமதி செய்கிறோம்“ என்றனர்.
“சமீபத்தில்,FAMA போன்ற மாவட்ட வேளாண்மைத் துறையும் எங்களுடன் இணைந்து எங்கள் மிளகாய்களை மொத்தமாக வாங்க ஒப்பந்தம் செய்தனர். இதன் மூலம் எங்கள் விவசாயத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே, எங்கள் வணிகத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
விவசாயத்துறையில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்கள் இந்த போராட்டத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறினர். அதாவது மூலதனமின்மை, ஆலோசனை ஆதரவு இல்லாமை, சந்தைப்படுத்தல் சிக்கல்கள் மற்றும் உற்பத்தி அபாயங்கள் போன்ற சிக்கல்களை இவர்கள் எதிர்கொண்டனர்.
“ வாழ்க்கையில் பல தடைகள் வந்தாலும் நம் முன்னேற பல சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆகவே, இந்த கோவிட்-19 காலத்தில் வேலையில்லாதவர்கள் அல்லது நிதிப் பிரச்சினைகள் மற்றும் குறைந்த வருமானத்தை எதிர்கொள்ளும் இளைஞர்கள் தங்கள் நம்பிக்கையை கைவிடாமல் சிறிய அளவிலான விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும்” என்றனர்.
கல்வி கற்ற போதிலும் விவசாயத் துறையில் ஈடுபடுவதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று மற்ற இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இந்த இளைஞர்கள் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 6 =