கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உதவ தயாராகவுள்ளது நெஸ்லே மலேசியா

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலேசியர்களை ஆதரிப்பதற்காக நெஸ்லே மலேசியா, ‘நெஸ்லேவுடன் இணைந்திருங்கள்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இது கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் உணவு மற்றும் பானம் (கு&க்ஷ) விநியோகிப்பாளர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெஸ்லே மலேசியாவால் ஏற்பாடு செய்த கோவிட்-19 நிவாரண முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பிரசாரம் உள்ளது.
இந்த பிரசாரத்தின் கீழ் நெஸ்லே மலேசியா இதற்கு முன் பல உணவகங்களுக்கு உதவும் வகையில் பண நன்கொடைகளை வழங்கியுள்ளது.
பிரசாரம் முழுவதும் ஆதரவைப் பெற்ற உள்ளூர் வணிக சங்கங்களான மலேசிய முஸ்லிம் உணவக தொழில்முனைவோர் சங்கம், மலேசிய இந்திய உணவக தொழில்முனைவோர் சங்கம், மலேசிய காப்பிக் கடை உரிமையாளர்கள் சங்கம், மலேசிய ஹோட்டல் சங்கம் ஆகியவை அடங்கும்.
நெஸ்லே மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுவான் அரனோல்ஸ் கூறுகையில், “செயல்பாடு படிப்படியாக மீண்டு வருகின்ற போதிலும், இன்னும் பல சிறு வணிகங்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளன. நெஸ்லே மலேசியாவின் பிரசாரத்தின் மூலம், இந்த கடினமான நேரத்தில் 15,000 உள்ளூர் வணிகங்களுக்கு உதவ நாங்கள் ரிம5 மில்லியனை ஒதுக்கியுள்ளோம்” என்றார் அவர்.
நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் அரசாங்கத்தின் குறிக்கோளுக்கு இணங்க, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை ஆராயவும், இந்த வாடிக்கையாளர் பிரிவுக்கான டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை ஆதரிக்கும் புதிய தொழில்நுட்ப தீர்வுகளைத் தொடங்கவும் நெஸ்லே உதவும்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது பல வணிகர்கள் டிஜிட்டல் தளத்தை நோக்கி சென்றுள்ளனர். வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நன்மைகளைத் தரக்கூடிய பயனுள்ள தீர்வுகளை வழங்குவதற்கு பல்வேறு வணிக பங்காளிகள் மற்றும் சில்லறை சங்கங்களுடன் விரிவான ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளோம்”என்று நெஸ்லே வணிக பிரிவின் தலைவர் யிட் வூன் லாய் கூறினார்.
மேலும் அரனோல்ஸ் கூறுகையில், “கோவிட்-19 காரணமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப வணிகர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் வணிகங்களை மறுதொடக்கம் செய்வதற்கும், புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்வதற்கும், அவர்களின் சலுகைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு உதவும்“ என்றார் அவர்.
நெஸ்லே உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பான உற்பத்தி நிறுவனமாகும். சுவிட்சர்லாந்தில் தலைமையகத்துடன், நெஸ்லே உலகெங்கிலும் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 17 =