
நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட்-19 நோய்த் தடுப்பூசி செலுத்த 18 மாதங்களாகும் என்ற கைரி ஜமாலுடினின் கூற்று அதிர்ச்சியளிக்கிறது.அதனைக் கடுமையாகச் சாடிய லிம் குவான் எங், அதற்குள் நாட்டில் பாதி பேர் செத்து மடிய வேண்டிவரும் என்று எச்சரித்தார்.இது அரசின் மெத்தனப் போக்கையும் கையாலாகாத தனத்தையும் காட்டுவதாகச் சாடிய அவர், அண்டை நாடான சிங்கப்பூரில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது நடந்து வருகிறது. அங்கு வேலை செய்யும் மலேசியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் முஹிடின் யாசின் என்ன செய்யப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கைரி ஜமாலுடின், இவ்வாண்டு மூன்றாம் காலாண்டுக்குள் பெருவாரியான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த சாத்தியம் இல்லையென்று கை விரித்துள்ளார்.
தடுப்பூசி பிப்ரவரி மாத இறுதியில் கிடைக்கப் பெற்று, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் பூர்த்தியடைய 18 மாதங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மருந்தின் பின்விளைவுகளைக் கண்டறிய தன்னார்வலர்களுக்குச் செலுத்தி, முடிவுகளைத் தெரிந்து கொண்ட பின்னரே, அது பொதுமக்களுக்குச் செலுத்தப்பட வேண்டும். அதன் காரணமாக பொதுமக்களுக்கு அதனைச் செலுத்த கால தாமதம் ஆகும் என்று கைரி ஜமாலுடின் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நோயின் அறிகுறி உள்ளவர்களுக்கே முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர்களோடு நெருக்கமாக இருந்தோருக்கும் அது முதலில் செலுத்தப்படாது என்று சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருந்தார்.