கொரோனா வைரஸ் விவகாரத்தைக் கையாள்வதில் விதிமுறை

0

கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்களின் நலனைக் காக்க, அரசு முக்கிய முடிவுகளை அறிவித்திருப்பதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

சீனா, தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்குச் சென்று திரும்பிவரும் தொழிலாளர்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்கண்ட நாடுகளில் இருந்து நாட்டுக்குத் திரும்பி வரும் தொழிலாளர்களை உடனடியாகப் பதிவு பெற்ற மருத்துவர் அல்லது மருத்துவ அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு முதலாளிகள் அனுப்ப வேண்டும். அதன் செலவினை முதலாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மருத்துவ அதிகாரியின் உத்தரவுக்கிணங்க மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ தடுத்து வைக்கப்படும் நாள்களுக்கு, சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு மருத்துவ விடுப்பு தரப்பட வேண்டும். மருத்துவ விடுப்பின் காலம் முடிவடைந்த பின்னரும், கூடுதலான மருத்துவ விடுப்பு தர வேண்டும்.

கொரொனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்கு முதலாளியின் உத்தரவின் பேரிலோ அல்லது தொழில் நிமித்தமாகவே செல்லும் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளில் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தடுத்து வைக்க நேர்ந்தால், அந்தக் காலக் கட்டத்துக்குரிய முழு சம்பளத்தை முதலாளிகள் வழங்க வேண்டும்.

மருத்துவ அதிகாரியால் தடுத்து வைக்கும் உத்தரவு வெளியிடப்படாவிட்டால், தொழிலாளர்கள் வேலைக்கு வருவதிலிருந்து முதலாளிகள் தடுக்கக் கூடாது. எனினும், நோயுற்றிருக்கும் தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாமென தடுக்கலாம். அந்தக் காலகட்டத்துக்கான மருத்துவ விடுப்பை முதலாளிகள் வழங்க வேண்டும்.

நோயின் காரணமாகத் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட கால கட்டத்தில் தொழிலாளி தமது வருடாந்திர விடுமுறையையோ அல்லது சம்பளம் இல்லாத விடுமுறையையோ எடுத்துக் கொள்ள முதலாளிகள் வற்புறுத்தக்கூடாது என குலசேகரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − ten =