கொரோனா வைரஸ் பாதிப்பு; இன உணர்வுகளைத் தூண்டாதீர்!

தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் கிருமி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் இன உணர்வுகள் எவ்வாறு தூண்டப்படுகின்றன என்பது வருத்தமளிப்பதாக ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எம். இராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களை எதிர்மறையாக சித்தரிக்கும் பல வெறுக்கத்தக்க செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில், மலேசியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் வைரஸ் கிருமி தொற்றுநோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்க வேண்டும். இதனை விடுத்து, சக குடிமக்களை அவர்களின் இனம் சார்ந்தும் மற்றும் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்தும் கேலி கிண்டல் செய்தல் கூடாது என பெக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

அதீத வேகத்தில் பரவி வரும் இந்த ஆபத்தான வைரஸ் கிருமி பல நாடுகளில் அமைதியின்மையை உருவாக்கி வருகிறது. இச்சவாலை எதிர்நோக்க ஒவ்வோர் அரசாங்கமும் தங்களின் கொள்கைகளின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனவே, நாம் அனைவரும் அரசாங்கத்தின் விதிமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றி நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனை ஒருவருக்கொருவர் நினைவூட்டிக் கொள்ளவும் வேண்டும் என்றார் அவர்.

வைரஸ்கள் இனம் அல்லது மதத்தைக் கண்டு வருவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காற்றில் பரவும் “வைரஸ்கள் யாரை வேண்டுமானலும் எளிதில் பாதிக்கக்கூடும். எனவே, இந்த அவசர நேரத்தில் ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பை உறுதிச் செய்து கொள்ளுங்கள்” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + six =