கொரோனா பரவல் காரணமாக ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் – வாடிகன் நிர்வாகம்

வாடிகன் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு உலக அளவில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

எனவே, இந்த ஆண்டு ஈஸ்டர் கொண்டாட்டத்தை பக்தர் களை நேரில் வரவழைக்காமல் கொண்டாட வாடிகன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மேலும், ஏப்ரல் 12-ந் தேதி வரை, போப் ஆண்டவரின் பொது சந்திப்புகளை வாடிகன் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தின் நேரடி ஒளிபரப்பில் மட்டுமே காண முடியும் என்றும் கூறியுள்ளது.

வாடிகன்

ஐரோப்பிய நாட்டினர் அமெரிக்கா வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏற்கனவே தடை விதித்து இருந்தார். இந்நிலையில், இந்த தடையை இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அவர் நீட்டித்துள்ளார்.

அந்த நாடுகளில் உள்ள அமெரிக்கர்களும், சட்டபூர்வ நிரந்தர குடிமக்களும் மட்டுமே அமெரிக்கா வர முடியும் என்றும், இந்த தடை உத்தரவு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருவதாகவும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறினார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 572 ஆக உயர்ந்து விட்டது. 51 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில், கொரோனா வைரசுக்கு மேலும் 10 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 80 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்குத்தான் புதிதாக நோய் தொற்று ஏற்படுவதாக சீனா கூறியுள்ளது.

ஈரானில் ஒரே நாளில் 113 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 724 ஆக உயர்ந்தது. நாட்டு மக்கள் பயணங்களை ரத்து செய்து விட்டு, வீட்டிலேயே இருக்குமாறு ஈரான் அரசு அறிவுறுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 5-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. நிலைமையை நேரடியாக கண்காணித்து வருவதாக பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள், 14 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலியா விதித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில், அத்தியாவசியம் அல்லாத பொது இடங்களை மறுஉத்தரவு வரும் வரை மூடுமாறு பிரதமர் எடோவர்டு பிலிப்பி உத்தரவிட்டுள்ளார். கடைகள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், மதுபான விடுதிகள், நடன விடுதிகள் ஆகியவை மூடப்பட்டன. மருந்தகங்கள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் போன்றவை மட்டும் திறந்திருக்கும்.

தென்கொரியாவில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து வணிக வளாகங்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், நாடக அரங்குகள் ஆகியவற்றை மூடுமாறு பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ உத்தரவிட்டுள்ளார். 10 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கு வங்காளதேசம் தடை விதித்துள்ளது. இன்று முதல் 31-ந் தேதி வரை இத்தடை அமலில் இருக்கும். விசா சேவையும் 2 வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது.

செசல்ஸ் நாட்டில் முதல் முறையாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பர்கினா பசோ நாட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து 30 நாட்களுக்கு பயணிகள் யாரும் வரக்கூடாது என்று கம்போடியா தடை விதித்துள்ளது.

நார்வே, கிரீஸ், துருக்கி உள்பட 21 நாடுகளுடன் விமான சேவையை மொராக்கோ ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 7 =