கொரோனா நோய்க்கு சிகிச்சை- சித்த மருத்துவ முகாமில் குவியும் நோயாளிகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாமில் தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த சித்த மருத்துவ முகாம் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்கியது.


ஆரம்பத்தில், 50 முதல் 70 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது இங்கு நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவ முகாம் குறித்து சித்தா டாக்டர் கே.வீரபாபு நிருபரிடம் கூறியதாவது:-

ஜூன் 3-ந் தேதி 250 படுக்கைகளுடன் தொடங்கிய இந்த மருத்துவ முகாமில் மக்கள் வரத்து அதிகரிக்க அதிகரிக்க 50, 50 படுக்கைகளாக அதிகரித்து தற்போது 465 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேற்கொண்டு இட வசதி இல்லாத காரணத்தால் படுக்கை வசதியை அதிகரிக்க முடியவில்லை.

இங்கு காய்ச்சலுக்கு மட்டும் ‘பாரசிட்டமால்’ ஆங்கில மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதை தவிர்த்து கபசுர குடிநீர், சிறப்பு மூலிகை தேனீர் மற்றும் நோயாளியின் தன்மைக்கு ஏற்ப ஏனைய சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக துணை நோய் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது அவர்கள் உயிர் இழக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இங்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, சிறுநீரக பாதிப்பு போன்ற பக்க நோய்கள் உள்ளவர்களும் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். எனவே, எந்த துணை நோய் உள்ளவர்கள் என்றாலும், இங்கு வந்தால் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும். இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் இதுவரை யாரும் உயிர் இழக்கவில்லை என்பது இந்த மருத்துவ முகாமின் சிறப்பாகும்.

இங்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.

இது வரை 2,425 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 1,963 நோயாளிகள் இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 462 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + fifteen =