கெடா வன இருப்பு ஆக்கிரமிப்பு பிரச்சினையை உடனடியாக கவனிக்க வேண்டும்

கெடா மாநிலத்தில் உள்ள வனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதை நிறுத்துவ தற்கு கெடா மாநில அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கெடா மாநில வனத்துறை இலாகா இப்பிரச்சினை தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் தாங்கள் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார். அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள வன வளங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பிரச்சினையை சமாளிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். வனங்கள் அழிக்கப்பட்டால் அப்பகுதிகளின் பல்லுயிரை அழிப்பது மட்டுமல்லாமல் இயற்கை பேரழிவுகளைத் தூண்டி மாநிலத்தில் மக்களின் வாழ்க்கையை இது பாதிக்கும் என்றார் அவர். இந்த தொடர்பாக செப்டம்பர் 12, 2021 தேதியிட்ட பெர்னாமா செய்தி அறிக்கையில், இச்செயலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இவர்களுக்கு எதிராக எந்த கருணையும் காட்டப்படாமல் வனச் சட்டம் 1984 ஐ கடுமையாக அமல்படுத்துமாறு வனத்துறையை பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது. கெடா மாநில வனவியல் இயக்குனர் முகமது அப்துல்லாவின் கூற்றுப்படி, மாநிலத்தில் மொத்தம் 3,500 ஹெக்டர் வனப்பகுதிகள், எண்ணெய் பனை, ரப்பர், டுரியான் மற்றும் குடியேற்றப் பகுதிகள் போன்ற விவசாயத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக பொறுப்பற்ற சில தரப்பினரால் 2011 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றார். ஒரு இயக்குனரே தனது மாநில வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். இந்த செயல்பாடுகள் இவ்வளவு நீண்ட காலத்திற்கு எப்படி நடந்திருக்கும். ஏன் எந்தவொரு மீட்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பி.ப.சங்கம் கேட்க விரும்புகிறது. மேலும் ஏன் சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் உடனடியான மற்றும் பயனுள்ள நடவடிக்கை எடுக்காமல் ஒரு பெரிய வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதி தந்துள்ளனர். எனவே, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இந்த விஷயத்தில் ஊழலின் சாத்தியக்கூறுகளை அடையாளம் காண விசாரணை செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுப்பதாக முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =