கெடாவில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க செயல் குழு

0

தேசிய கூட்டணியின் கீழ் இயங்கும் கெடா மாநில பாஸ் அரசாங்கம் முறையான பேச்சு வார்த்தைக்கு வழி விடாமலும் மாற்று நிலம் வழங்காமலும் மனிதாபிமானம் அற்ற முறையில் கடந்த வாரம் அதிகாலை நேரத்தில் ஆலயத்தை உடைத்தது இந்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன் தொடர்பாக நேற்று அலோர்ஸ்டார் ஜாலான் தஞ்சோங் பெண்டாஹாரா சீனர் மண்டபத்தில் கெடா அரசு சாரா இயக்கங்களிடையே சந்திப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
அந்த கூட்டம் அலோர்ஸ்டார் டெர்கா சட்டமன்ற உறுப்பினர் தான் கொக் யூ , கோதா டாருலாமான் சட்டமன்ற உறுப்பினர் தே சுவீ லியோங் ஆகியோரின் ஆதரவில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் தலைவர்களும் அரசுசாரா இயக்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஆலயத் தலைவர்கள் இஸ்லாம் அல்லாத ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு தனிக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதன் பேரில் இஸ்லாம் அல்லாத ஆலயங்கள் பாதுகாப்புக் குழு ஒன்றையும் அமைக்கப்பட்டது.
சீனர்கள் மற்றும் இந்தியர்களை உள்ளடக்கிய பத்து பேர் கொண்ட அந்த குழு இனிமேல் ஆலய விவகாரங்கள் தொடர்பாக அரசியல் தலைவர்களையும் மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஆலய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு அந்தச் செயற்குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்திற்குப் பிறகு வந்திருந்த ஆலயத் தலைவர்களும் பேராசிரியர் இராமசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் உடைபட்ட ஆலய வளாகத்தை பார்வையிட்டனர்.
அதற்கிடையில் மாநில மந்திரி பெசார் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஆலயத்திற்கு மாற்று இடம் வழங்க முன்வந்ததாக பொய்யுரைத்துள்ளார். மேலும் அவர் இந்துக்களை ஏளனமாக நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளபட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 10 =