கெடாவில் தைப்பூச விடுமுறை ரத்து; மந்திரி பெசாருக்கு எதிராக எம்பிக்கள் சரமாரியான தாக்குதல்!

  கெடா மாநிலத்தில் தைப்பூசத்திற்கான சிறப்பு விடுமுறையை ரத்து செய்துள்ள பாஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தையும் அம்மாநில மந்திரி பெசார் முகமட் சனுசிக்கு எதிராக மலாய் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.கெடா மந்திரி பெசாரின் இந்த முடிவு, முஸ்லிம்கள் மீதும் மலாய்க்காரர்கள் மீதும் ஒரு தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு சாடியுள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் மலாய்-முஸ்லிம் அணுகுமுறையை அமல்படுத்தப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மந்திரி பெசார் முகமட் சனுசி, பாஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பது ஒரு தர்மசங்கடமாகும் என்று பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவரும் ஜொகூர்பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மால் நாஸிர் குறிப்பிட்டார்.
  அது தவிர, கெடா அரசின் அந்நடவடிக்கையானது மலாய்க்காரர்கள் அல்லாதாரிடமும் முஸ்லிம்கள் அல்லாதாரிடமும் மலாய்க்காரர்கள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்தார். இந்நாட்டின் பல்லினங்கள் மற்றும் பல சமயங்களைக் கொண்ட கட்டமைப்பு முறையைத் தாம் மதிக்கவில்லை என்பதை சனுசியின் அறிக்கை காட்டுகிறது. அம்முடிவை சனுசி மீட்டுக் கொண்டாக வேண்டும். இல்லையெனில், அது இனப் பூசலை ஊதிப் பெரிதாக்கும் என்பதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்று அக்மால் தொடர்ந்து கூறினார்.
  சைஃபுடின்
  கெடா அரசின் முடிவை பி.கே.ஆர். கட்சியின் பண்டார் பாரு கூலிம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சைஃபுடின் நசுத்தியோனும் கடுமையாகச் சாடியுள்ளார்.அது அறிவுக்கு ஒவ்வாத ஒரு முடிவாகும். கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவே பொதுவிடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது. ஆனால், தைப்பூசக் கொண்டாட்டத்தை ரத்து செய்தாலே இதற்குப் போதுமானதாகும். கொண்டாட்டத்தை ரத்து செய்து அதே நேரத்தில் பொதுவிடுமுறையை அனுமதித்திருந்தால் இந்து பக்தர்கள் தத்தம் வீடுகளிலேயே பொழுதைக் கழித்திருப்பார்கள் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளருமான சைஃபுடின் குறிப்பிட்டார்.
  நூரின் அய்னா
  கெடா மாநிலத்தில் தைப்பூசத்திற்கு சிறப்பு விடுமுறை வழங்கினால் எந்தவோர் இழப்பும் ஏற்படப் போவதில்லை என்று மெர்போக் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் நூரின் அய்னா தெரிவித்துள்ளார்.தைப்பூசம் போன்ற திருவிழாக்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தற்காக்கப்பட வேண்டும். அந்த வகையில் கெடா மாநில அரசாங்கம் தைப்பூசத்திற்கு சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும். இந்த சிறப்பு விடுமுறையானது நம் மதங்களையும் கலாசாரங் களையும் மதிக்கும் தன்மை கொண்டது என்றார்.
  பிரபாகரன்
  பல்வேறு கலாச்சாரங்களையும் சமயங்களையும் கொண்ட மக்கள் வாழும் நமது நாட்டின் தலைவர் ஒருவர் இத்தகைய வேற்றுமை உணர்வைக் காட்டுவது கண்டனத்திற்குரியது என்று பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் சொன்னார். பல்வேறு சமயங்கள் மற்றும் இனங்களின் சடங்குகள் தொடர்பான சமய உணர்வோ புரிதலோ சனுசிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  five × 4 =