கெஅடிலான் மகளிர் பிரிவுத்தலைவியாக பாவ்சியா சாலே நியமனம்

கெஅடிலான் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவியாக குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பாவ்சியா சாலே நியமிக்கப் பட்டுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்னர் கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவியும் சிலாங்கூர் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான ஹனிசா தஹா அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப் பட்டார்.
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரான ஹனிசா தாஹா, பினாங்கு சுங்கை ஆச்சே சட்டமன்ற உறுப்பினர் ஸுல்கிப்லி இப்ராஹிம், செபெராங் ஜெயா டாக்டர் அபிப் பஹாருடின் ஆகியோர் இரு வாரங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
சிலாங்கூர் செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டயோராவும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் கெஅடிலான் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத்தலைவியாக பதவி வகித்தார்.
இந்நிலையில் கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவியாக தாம் நியமிக்கப்பட்டிருப்பதை பாவ்சியா சாலே நேற்று உறுதிப்படுத்தினார்.
கெஅடிலான் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா தலைமையில் நடந்த மகளிர் பிரிவு உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல், கெஅடிலான் மகளிர் பிரிவை வழி நடத்தும் பொறுப்பை பாவ்சியா சாலே ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவி பதவிக்குப் போட்டியிட்ட இவருக்கு 47 விழுக்காட்டு ஆதரவு வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவி பதவியில் இருந்து ஹனிசா தஹா நீக்கப்பட்டதும் இந்தப் பதவிக்கு பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், எலிசபெத் வோங், கன் பெய் நீ ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இப்போது இந்தப் பதவிக்கு பாவ்சியா சாலே நியமிக்கப் பட்டிருப்பதால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 12 =