குவாந்தானில் 1,566 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

0

பகாங் மாநிலத்தில் உள்ள குவாந்தான் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் கோவிட்-19 சாலைத் தடுப்புச் சோதனையில் சுமார் 1,566 வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டன.காரணமின்றி வெளியேறியவர்கள் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து பகாங்கிற்கு வருகை புரிந்தவர்களும் கூட திருப்பி அனுப்பப்பட்டனர் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ஜாலில் ஹஸான் தெரிவித்தார்.
இந்த சாலைத்தடுப்புச் சோதனைகளில் சுமார் 6,582 வாகனங்கள் சோதிக்கப்பட்டன. இந்நடவடிக்கையில் போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 803 பேர் பணியில் இருந்தனர்.
இந்த சாலைத் தடுப்புச் சோதனைகளைத் தவிர்த்து பகாங் மாநிலம் முழுவதும் 122 பகுதிகளில் அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்நடவடிக்கையில் 664 அதிகாரிகள் ஈடுபட்டனர். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பொதுமக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு நிலைகளில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருந்த போதிலும் ஒரு சில தரப்பினர் இந்த உத்தரவைப் பின்பற்றுவதில் பிடிவாதமாக இருக்கின்றனர். பலமுறை சொல்லிப் பார்த்து விட்டோம். தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இது போன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறுபவர்களைக் கைது செய்து முழுமையான விசாரணை நடத்திய பிறகே போலீஸ் ஜாமீனில் விடுவிப்போம் என்றும் டத்தோ அப்துல் ஜாலில் தெரிவித்தார்.
பகாங் மாநிலத்தைப் பொறுத்த வரையில் மாநிலம் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 93 விழுக்காடாக இருக்கிறது. இது திருப்தியளிக்கக்கூடிய எண்ணிக்கையாக இருந்தாலும் இனி தொடர்ந்து வரும் நாட்களிலும் பொதுமக்கள் இந்த உத்தரவைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − four =