குற்றத் தீர்ப்பு அளிக்கப்பட்ட நஜிப்பை பயணம் செய்ய அனுமதித்தது ஏன்?

லஞ்சஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை வெளிநாடு செல்ல அனுமதித்தது ஏன் என்று ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார். ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் யோக்ஜாகர்த்தா செல்வதற்காக கோலாலம்பூர் அனைத்துலக விமானம் நிலையத்திற்கு ( கேஎல்ஐஏ2) வந்திருந்தபோது அவரின் கடப்பிதழ் 2020ஆம் ஆண்டு வரை செல்லத்தக்கதாக இருந்த போதிலும் பயணத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்று கிட் சியாங் சொன்னார். டோனி புவாவின் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்துபோதிலும் வெளிநாடு செல்ல நஜிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என்று அவர் கேட்டார். லஞ்சஊழல் வழக்கில் குற்றவாளி என்று நஜிப்புக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையிலும் மேலும் பல வழக்குகளை எதிர்நோக்கிவரும் வேளையிலும், தமது பயண ஆவணங்களை ஒப்படைக்கும்படி அவர் விண்ணப்பம் செய்தபோது அதற்குச் சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் எதிர்ப்பு தெரிவிக்காது ஏன்? அது குறித்து அது விளக்கமளிக்க வேண்டும் என்று ‘சி4’ எனப்படும் லஞ்ச ஊழல் எதிர்ப்பு மையம் நேற்றுமுன்தினம் வலியுறுத்தியிருந்தது. நஜிப் தலைமறைவாக மாட்டார் என்று அரசாங்கம் எப்படி உறுதி செய்தது என்றும் அந்த அமைப்பு கோரியிருக்கிறது என்று கிட் சியாங் சொன்னார். சி4 அமைப்பு எழுப்பியிருக்கும் கேள்விகள் மக்கள் நல சார்ந்த நியாயமான கேள்விகள் ஆகும். சட்டத்துறைத் தலைவர் தம்மை சட்ட ஆட்சியையும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை மீதான நல்லாட்சிக் கொள்கைகளையும் நிலைநிறுத்துபவர் என நம்புவாரேயானால் இக்கேள்விகளுக்கு அவர் பதிலளித்தாக வேண்டும் என்றார் கிட் சியாங். சிங்கப்பூர் செல்வதற்காக நஜிப்பின் அனைத்துலக கடப்பிதழை திரும்ப ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. டோனி புவாவைத் தவிர்த்து, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் அரசியல் கேலிச் சித்திரக் கலைஞர் ஸூல்கிப்ளி அனுவார் அல் ஹக் (ஸூனார்) ஆகியோருக்கும் இதற்கு முன்பு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − eleven =