நேற்று முன்தினம் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தின் தொடக்கக்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் அது முழுமையான வெற்றி அல்லவென்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அது தொடக்கக்கட்ட வாக்களிப்பு என்பதால் மகிழ்ச்சி அடைய எதுவும் இல்லையென்றும், பட்ஜெட்டுக்கான செயற்குழு முறையிலான விவாதமும் வாக்கெடுப்பும் நடக்கும்போது நிலைமை வேறு விதமாக மாறும் என்று அவர் உறுதியாகக் குறிப்பிட்டார்.
அன்வார் அதனைத் தெரிவிக்கும்போது, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோர் உடனிருந்து அதனை ஆதரித்தனர்.
பட்ஜெட் தாக்கல் சம்பந்தமான விளக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், அதனை எதிர்ப்பவர்கள் யார் என்று சபாநாயகர் அஸார் அஸிஸான் ஹருண் வினவியபோது, அமானா துணைத் தலைவர் மாஃபுஸ் ஒமார் தலைமையில் வெறும் 13 பேர் மட்டுமே எழுந்து நின்றதை அடுத்து, அவர்கள் எதிர்ப்பு நிராகரிக்கப் பட்டது. அதனை விவாதிக்கக் குறைந்தது 15 பேரின் பரிந்துரை தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
மாஃபுஸுடன் அமானா தலைவர் முகமட் சாபுவும் காப்பார் பக்காத்தான் எம்பி அப்துல்லா சானி அப்துல் ஹமிட்டும் எழுந்து நின்றபோது, அவர்களை அமரும்படி லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே அது பற்றி வினவியபோது, பல பிகேஆர், ஜசெக எம்பிக்கள் அதனை அன்வாரிடம் விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
பட்ஜெட்டுக்கான எதிர்ப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கத் தவறியதை அதன் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
தொடக்கக் கட்டமாக பட்ஜெட் ஒப்புதலைப் பெற்றிருந்தாலும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அமைச்சு வாரியாக விவாதங்கள் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும், 2021ஆண்டுக்கான விநியோக மசோதா மக்களவையில் டிசம்பர் 17ஆம் தேதி இறுதியாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.