குதிரை பேரத்தில் பணம் கைமாறுவதைக் கண்காணிக்க வேண்டும்

ஆட்சி கைமாறிய பின்னர், நாடாளுமன்றக் கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக சி4 எனும் அரசு சாரா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு, அணுக்கமானவர்களுக்குச் சலுகை அளிப்பதை எதிர்க்கும் சி4 இயக்கத்தின் தலைவர் சிந்தியா கேப்ரியல், அந்த இரண்டு மாத காலத்தில் ஆதரவாளர்களை இழுக்க பணம், பட்டம், பதவி முதலியவை தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு மோசடி வேலைகள் நடைபெறும் என அச்சம் தெரிவித்தார். அதில் குதிரை பேரம் நடக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) தனது கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென சிந்தியா கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, நாடாளுமன்றக் கூட்டம் மார்ச் 9ஆம் தேதியிலிருந்து மே 18க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் சபாநாயகர் முகமட் அரிஃப் மாட் யூசோப் அறிவித்தார். அந்தக் காலகட்டத்தை தமக்கான ஆதரவாளர்களின் பலத்தை அதிகரிக்க பிரதமர் முஹிடின் யாசின் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது. கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்கப்பட்டதனால், மக்கள் உதாசீனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் பிரதிநிதிகள் பணம், பட்டம், பதவிக்காக மக்களுக்குத் துரோகம் இழைக்கக் கூடாதெனவும் சிந்தியா வலியுறுத்தினார். மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தைத் தாமதப்படுத்துவதன் மூலம், முதலீட்டாளர்களும் தனியார் துறையினரும் உண்மை நிலவரம் தெரியாமல் தடுமாறுவர் என சிந்தியா எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 7 =