குடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய இந்தியப் பெண்கள் முன்வருவதில்லை

0

பெண்கள் நாட்டின் கண்கள், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சுயமாக செயல்படுகிறார்கள் என்று அனைவரும் பேசினாலும், குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள் இருக்கவே செய்கின்றனர். குறிப்பாக மன ரீதியிலும் உடல் ரீதியிலும் பாதிக்கப்பட்டு வரும் பெண்கள் வெளியே வந்து புகார் கொடுப்பது குறைவு. அதிலும் இந்தியப் பெண்கள் ஊர் உலகம் என்ன சொல்வார்கள் என்று பயந்தே வெளியில் வருவதில்லை என பேராக் மாநில மகளிர் மேம்பாட்டுத் துறை இயக்குனர், கவரம்மா தெற்கு ஈப்போ ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற குடும்ப வன்முறை பிரசார நிகழ்வில் உரையாற்றினார்.
முன்பு காவல் துறையில் பெண்கள் குடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய வேண்டும். அதிலும் 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பின்னர், சமூகநல இலாகாவிலும் பெண்கள் குடும்ப வன்முறை பற்றி புகார் செய்யலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அனைத்துமே குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்காக மாற்றியமைக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்கு குடும்ப வன்முறை தொடர்பாக 3000 புகார்கள் மகளிர் மேம்பாட்டுத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் மாதம் 300 சம்பவங்கள் பதிவாகிறது எனலாம். குடும்ப வன்முறையை எதிர்நோக்கும் பெண்கள் அல்லது ஆண்களாக இருக்கட்டும் சட்டத்தில் உங்களுக்கு இருக்கும் தீர்வுகளை தெரிந்து கொள்ளுங்கள். குடும்ப விவகாரம் தானே என்று அமைதியாக நெருக்கடியை, தாக்குதலை சந்திக்க வேண்டாம். நாம் தான் நமக்காக புகார் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, தெற்கு ஈப்போ ரோட்டரி கிளப்பின் தலைவர் கே.பத்மாதேவி பேசுகையில், இந்த பிரசாரத்தை நாங்கள் செய்து வரும் காரணம் ஒன்று தான். குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்யவே. ஆனால், அதற்கு முன் பாதிக்கப்பட்டவரும் முன் வந்து தகவல் தெரிவித்தால் ஏதுவாக இருக்கும். குடும்ப வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணமாக உள்ளது. ஆனால், அனைவரும் மற்றவர்களுக்கு நடந்தால் நமக்கு என்ன என்று நழுவிச் செல்கின்றனர் என்றார்.

இந்நிகழ்வில் டத்தின் நோர்மா ஹானோம் (வனித்தா பிரிஹாத்தின் பேராக் தலைவர்), அசோகன் கந்தையா, ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனூன் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =