குடியுரிமை வழங்குவதில் இரட்டை வேடமா?

0
Kosovo-born midfielder Liridon Krasniqi is now a Malaysian citizen – pic courtesy of FAM

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோரை பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு அரவணைத்து, அவர்களை தங்கள் நாடுகளின் சார்பில் பிரதிநிதிக்கும் நோக்கில் அந்நாட்டு குடியுரிமையை வழங்கி வருவதை நாம் பார்த்தே வருகிறோம்.
அவ்வாறு குடியுரிமை தருவதில் தவறேதும் இல்லையென்று சொல்லப்பட்டாலும், அது நாட்டின் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாகவும் வழக்க நெறிமுறைக்கு மாறாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
3 மில்லியன் மக்களையே கொண்டிருக்கும் ஜமைக்கா உலக வல்லரசுகளை மண்ணைக் கவ்வ வைத்து ஓட்டப் பந்தயத்தில் அபார சாதனைகளை ஈட்டி வருகிறது. அதே போன்று 5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட டென்மார்க் உலகத் தரம் வாய்ந்த பூப்பந்து விளையாட்டாளர்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகள் அம்மாதிரியான விளையாட்டாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் நாடுகளுக்கு விளையாட அழைப்பது வழக்கமானதுதான். சொந்தக் காரணங்களுக்காக சொந்த நாட்டின் குடியுரிமையைத் துறந்து, மற்ற நாடுகளுக்குக் குடியேறி, அவர்கள் நாடுகளில் வசிக்க நேர்கிறது. அந்த நாடுகள் முக்கிய காரணங்களுக்காக அவர்களுக்குக் குடியுரிமை தருகின்றன.
அதில் குடியுரிமை என்பது பணத்தைப் பண்ட மாற்று வியாபாரம் செய்வது போலப் பாவித்து வருவதும் காணப்படுகிறது.
மலேசியாவில் அது போன்று நடந்து கொள்வது தவறில்லை என்று சொல்லப்பட்டாலும், மலேசியாவின் பிரச்சினையே வேறு விதமானது. மற்ற நாடுகளில் குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் நிலையில்லை. ஆனால், மலேசியாவில் அது பரவலாகவே உள்ளது. இந்த நாட்டிலே பிறந்து பல்வேறு காரணங்களுக்காகத் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இலவு காத்த கிளி போல இருப்பது கண்கூடு.
ஜொகூரில் இருக்கும் கொசோவோ பந்து விளையாட்டாளர் லிரிடோன் கிராஸ்னிக்கிற்கு இரு வாரங்களுக்கு முன்னர் குடியுரிமை வழங்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த அவர் ஜொகூரின் ஹரிமாவ் மலேசியா அணியில் விளையாடி வருகிறார். அவருக்குக் குடியுரிமை தருவதில் தவறில்லை என்று கூறுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவர் இங்கு வந்து 5 ஆண்டுகளே ஆகியிருக்கும் வேளையில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் லிரிடோனுக்கு மைகார்ட் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர வசிப்பிட அனுமதிக்குக் கூட அவர் தகுதி பெறாமல் இருக்கும்போது, மைகார்ட் வழங்கி குடியுரிமை இலாகா உலக சாதனையை ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியதுதான்!
ஆயிரக்கணக்கானோர் குடியுரிமைக்காகப் பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு மிக மிக விரைவாக மைகார்ட் வழங்கியது ஏன்?
அரசியலமைப்பு விதி 19(3) இன் கீழ் ஒருவருக்குக் குடியுரிமை வழங்க வேண்டுமாயின், 12 ஆண்டு காலத்தில் அவர் குறைந்தது 10 ஆண்டுகள் மலேசியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
2015இல் ஜொகூருக்கு வந்த கிராஸ்னிக்கிற்கு குடியுரிமை வழங்கப்பட்டது எந்த சட்டத்தின் அடிப்படையில்? அதில் யார் சம்பந்தப் பட்டுள்ளனர் என்பது விளக்கப்பட வேண்டும். இங்கு பெற்றோரில் ஒருவர் மலேசிய குடிமகனாக இருந்தும், அவரின் மனைவி அந்நிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கும்போது, அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குக் குடியுரிமை பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கும்போது, கிராஸ்னிக்கிற்கு எப்படி குடியுரிமை வழங்கப்பட்டது?
உலகப் புகழ் பெற்ற பந்து விளையாட்டாளர் லையனல் மெஸ்ஸி மலேசியாவில் குடியேற விரும்பினாலும், அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக அவருக்கு அதனை வழங்கலாமா அது அரசியலமைப்பு விதியைப் புறக்கணிப்பது ஆகாதா?
குடியுரிமைக்காகக் காத்திருப் போரை இந்த விவகாரம் பாதிக்காது எனச் சொல்வோரும் உண்டு. ஆனால், இங்கு 30,000க்கும் அதிகமானோர் குடியுரிமைக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் வேளையிலும் மலேசியர்களை மணந்து இங்கேயே குடியிருந்து கொண்டு, வேலையையும் செய்து வரும் மனைவிமார்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது இருப்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களில் சிலர் வருமான வரியையும் செலுத்துபவர்களாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.
ஒருவர் மற்ற நாடுகளுக்குக் குடியேறுவது அவரது விருப்பமாகும். ஒரு நாட்டில் அவருக்குக் குடியுரிமை தருவதற்குத் தகுதி இருந்தால், அதனைக் கொடுப்பதிலும் தவறேதும் இல்லை.
அதில் ஒரு நாடு குடியுரிமை தருவதில் இரட்டை வேடம் போடக்கூடாது. பந்து விளையாட்டாளர்களுக்கும் மிக முக்கிய பிரமுகர்களின் மனைவிமாருக்கும் சட்டத்துக்கு முரணாக அதனைத் தருவது தவறாகும். குடியுரிமைக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு அந்தக் கரிசனத்தைக் காட்டாதது ஏன்?
ஆட்சியைக் கைப்பற்றிய 100 நாளில் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என வாக்குறுதி கொடுத்ததே இந்த அரசுதான். 20 மாதங்களாகி விட்டாலும் அந்த வாக்குறுதி என்னவானது என பலரும் கேட்கின்றனர்.
மக்கள் நலத்துறையின் கணக் கெடுப்பின் மூலம் 18 வயதுக்கும் குறைந்த நாடற்ற பிள்ளைகள் 1,933 பேர் இருப்பதாகவும் அதில் 1,098 பேர் சிறுவர்கள் என்றும் 835 சிறுமிகளும் இருப்பதாக பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு 18 வயதுக்குள் குடியுரிமை கொடுக்கப்படா விட்டால், அவர்கள் நாடற்ற அகதிகளாக சாலையில் போக்கிடம் இல்லாமல் திரிய வேண்டியதுதான்.
ஆட்சி மாறினாலும் குடியுரிமை கொடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுவது ஏன்? அதில் மர்மக் கரங்கள் நீளுவதும் ஏன்? சட்டங்களை வளைத்து வேண்டப்பட்டவர்களுக்கு அடிபணிவது ஏன்?
இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் மறைவது எப்போது?
இந்நிலையில் கிராஸ்னிக்கிற்கு விதிமுறைக்கு முரணாக குடியுரிமை வழங்கப்பட்டது ஏன் என அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். அதற்கு அரசு மௌனம் சாதித்தால், குடியுரிமைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் 30,000 பேருக்கு எப்போது குடியுரிமை வழங்கப்படும் என அரசு அறிவிக்க வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 7 =