கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தவை சாதாரண வெட்டுக்கிளிகள்- நிபுணர்கள் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நேரலகிரி ஊராட்சியில் வாழை மரங்கள், எருக்கஞ்செடிகள், ஆமணக்கு செடிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அமர்ந்திருந்தன.

வெட்டுக்கிளிகளால் மொட்டையாக காணப்படும் மரம்

இந்த வெட்டுக்கிளிகள் இருந்த செடிகளில் இலைகள் இல்லாமல் மொட்டையாக காட்சி அளித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பூச்சிகள் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர். சுந்தர்ராஜன் தலைமையில் வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மோகன்ராஜ் குழுவினர் வெட்டுக்கிளிகள் உள்ள பகுதிக்கு நேரில் சென்று இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தற்பொழுது வந்துள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை எனவும் கள்ளிச்செடிகளில் வந்து அமரும் வெட்டுக்கிளிகள் என்றும் இது பருவநிலை மாற்றம் காரணமாக வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இவைகளை தடுக்கும் பொருட்டு அதற்கு உரிய பூச்சி மருந்துகளை தெளிக்க அந்த பகுதியில் பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்கினர். இதன் காரணமாக பொதுமக்கள் எந்தவித அச்சமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை என்று டாக்டர். சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வெட்டுக்கிளிகளில் ஒன்றை பிடித்து பூச்சிகள் ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு சென்றனர்.

கேரளா மாநிலம் வயநாடு வழியாக ஊட்டி காந்தல் பகுதிக்கு வெட்டுக்கிளி வந்ததாக நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடமாநிலத்தை சூறையாடும் வெட்டுக்கிளிகள் ஊட்டி, கோவை மாவட்டங்களில் ஊடுருவிட்டதாக பீதி பரவியது.

இதனையடுத்து வேளான் பல்கலைகுழு காந்தல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டது. 2-ம் கட்ட ஆய்வுக்கு பின்னர் தோட்டகலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ‘ஊட்டியில் காணப்படும் வெட்டுக்கிளி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் அல்ல. சாதாரணமான சிறு கொம்பு வெட்டுக்கிளிதான்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 2 =