கிருமி நாசினியை பயன்படுத்துவது எப்படி?: தமிழக சுகாதாரத்துறை விளக்கம்

0

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தும் முறை பற்றி தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில், பஸ், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி கைகள் படும் இடங்களான இருக்கைகள், மேஜைகள், கதவுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், ரெயில், பஸ், கதவுகளின் கைப்பிடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

சினிமா தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சி முடிந்ததும் இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் தியேட்டரின் உட்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பஸ், ரெயில்களில் ஒரு வழித்தட பயணம் முடிவடைந்ததும் இருக்கைகள், கைப்பிடிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் தரை தளங்களில் அவ்வப்போது கிருமி நாசினியை தெளித்து பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளி விட்டு அவ்வப்போது கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ்

பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகம், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், பஸ், ரெயில் மற்றும் வாகனங்களில் ஒரு லிட்டர் கிருமி நாசினியில் 19 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும். மருத்துவமனை, ஆம்புலன்ஸ் போன்றவற்றில் ஒரு லிட்டர் கிருமி நாசினியில் 9 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும்.

எந்திர தெளிப்பான் போன்ற பல்வேறு வகையான தெளிப்பான்களை பயன்படுத்தி கிருமி நாசினியை தெளிக்கலாம். கிருமி நாசினியை தெளித்த பின்பு, ஈரமான துடைப்பானை(மாப்) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாடகை கார்கள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, ரிக்‌ஷா போன்றவை தினமும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பயண முடிவின்போதும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து சுத்தம் செய்ய அறிவுறுத்துவதோடு, குளிர்சாதன பஸ்களை சுத்தப்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு கூற வேண்டும். பொது வாகனங்கள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் தினமும் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 14 =