கால்பந்து வீரர் கிருஷ்ணசாமி மறைவிற்கு மாமன்னர் தம்பதியர் அனுதாபம்

0

மலேசிய கால்பந்துக் குழுவின் முன்னாள் ஆட்டக்காரர் வி. கிருஷ்ணசாமி மறைவிற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் தம்பதியர் தங்களது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளனர்.
மலேசிய கால்பந்து உலகம் ஒரு தலை சிறந்த வீரரை இழந்திருப்பதாக மாமன்னர் தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களது குடும்பத் தலைவரை இழந்திருக்கும் கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிற்கு தேர்வான மலேசிய கால்பந்தாட்ட குழுவில் இடம் பெற்று இருந்த கால்பந்தாட்டக்காரர் கிருஷ்ணசாமி (72) நேற்று முன்தினம் இரவு 8.29 மணியளவில் காலமானார்.
இருதயக் கோளாறு மற்றும் மூச்சுத் திணறலால் பினாங்கு மருத்துவமனையில் காலமான கிருஷ்ணசாமிக்கு ராஸா (72) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் 11 முதல் 25 வயது வரையிலான 4 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
சிறையில் சார்ஜன்ட் மேஜராக பணியாற்றி ஒய்வு பெற்ற கிருஷ்ணசாமி நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.
முழங்காலுக்கு கீழ் இவரின் கால் துண்டிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக இவர் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
தாம் நீண்ட நாட்களுக்கு வாழப்போவதில்லை என்று தமது தந்தை 2 மாதங்களுக்கு முன்னர் தமது குடும்பத்தாரிடம் தெரிவித்ததாக கிருஷ்ணசாமியின் மகன் தனசீலன் கூறினார்.
“தமக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்ட போது என் தந்தை இவ்வாறு கூறினார். அவர் பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்” என்றார் தனசீலன்.
தமது கால் துண்டிக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணசாமி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தனசீலன் தெரிவித்தார்.
பினாங்கு இந்திய சங்கத்திற்கும் வாட்டர்ஃபோல் ரேஞ்ஜர்ஸுக்கும் முதலில் பந்து விளையாடத் தொடங்கிய கிருஷ்ணசாமி பின்னர் “பெர்னிலி கப்பல்” மாநிலத்தை பிரதிநிதித்தார். சிறை பயிற்சியாளர் ஜாலில் சே டின்னால் அடையாளம் காணப்பட்ட கிருஷ்ணசாமி சிறைக்காக “தைப்பிங் லீக்கில்” விளையாடிக் கொண்டிருந்தபோது பேராவிற்கு விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கால்பந்துத் துறையை விட்டு விலகிய பின்னர் பின்னர் அமெச்சூர் விளையாட்டாளர்கள் சங்கத்தில் கிருஷ்ணசாமி தொழில் நுட்ப அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
கிருஷ்ணசாமியின் நல்லுடல் பத்து லஞ்சாங் மயானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + seven =