காலத்தை வென்ற காவியப் பாடல்களை தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கியவர்

‘கலங்காதிரு மனமே’தொடங்கி ’கண்ணே கலைமானே’* வரை, காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல்களை தந்தவர் ‘கவியரசு கண்ணதாசன்‘ ஆவார்.
கன்னித் தமிழை கடலளவுக் கவிதைகளாக தனது கருத்துமிக்க கானங்களில் இழையோட விட்டவர், இந்த மாபெரும் கவி மன்னன் என்பதை மறுக்க இயலாது.
‘கூவாமல் கூவும் கோகிலம்’, ‘கண்ணில் தோன்றும் காட்சி யாவும்’, ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ’, ‘கண்மூடும் வேளையிலும்’, ‘கனிய கனிய மழலை பேசும்‘, ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’, ’போனால் போகட்டும் போடா’, ‘என்னருகே நீயிருந்தால்’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’, ’பூஜைக்கு வந்த மலரே வா’, ‘சிரித்து சிரித்து என்னை’, ’பொன்னாசை கொண்டோர்க்கு’, ‘ஆறு மனமே ஆறு’, ’தேரேது சிலையேது’, ‘நீ போகுமிடமெல்லாம்’, ‘மயக்கமென்ன இந்த மௌனமென்ன’, ‘விழியே கதை எழுது’, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’* போன்ற எண்ணற்றப் பாடல்களை தனது எழுத்துளியால் சிற்பமாக்கியவர் இந்தக் கவிச்சிற்பி ஆவார்.
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ் நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் சிறுகூடல்பட்டியில், தன வணிகர் மரபில் 1927ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 24 ஆம் நாளில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். அவருடன் உடன் பிறந்தோர் 8 பேர். கண்ணதாசன் குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாவார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான ஜலகண்டபுரம் ப.கண்ணன் என்பவர் மீது கொண்ட பற்றினால், தனது பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார். கம்பரின் செய்யுள்களிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1949 ஆம் ஆண்டு ஜூபிட்டர் பட நிறுவனம் தயாரித்த, ‘கன்னியின் காதலி’ படத்திற்கு முதன் முதலில் பாடல் எழுதுகின்ற வாய்ப்பு கண்ணதாசனுக்கு கிட்டியது.
அப்படத்திற்காக “கலங்காதிரு மனமே”* என்றப் பாடலை முதன் முதலாக எழுதிய அவர், அதே படத்திற்காக மேலும் 7 பாடல்களை எழுதினார். அதற்குப் பின்னர் 1950 ஆம் ஆண்டில் ‘திகம்பர சாமியார்’* படத்திற்கு பாடல்கள் எழுதிய அவர், 1951 இல், ’மர்மயோகி’, ‘சர்வாதிகாரி’, ‘சிங்காரி’, ‘தேவகி’, ‘மாயக்காரி’ போன்றப் படங்களுக்கும் பாடல்கள் புனைந்தார்.
தொடர்ந்து, ‘கல்யாணி’, ‘பணம்’, ‘திரும்பிப்பார்’ முதலிய படங்களுக்கும் பாடல்கள் எழுதிய அவர், 1953 இல் ‘ரத்ன தீபம்’ என்றப் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பினை பெற்றார்.
1954 இல் *‘இல்லறஜோதி’ படத்திற்கு கதை, வசனம், பாடல்கள் ர ஆகியவற்றை எழுதியதோடு, அதே ஆண்டில் ‘சுகம் எங்கே’ படத்திற்கு வசனம், பாடல்களை எழுதினார். அந்த ஆண்டில் *‘வைரமாலை’ படத்திற்கும் பாடல்களை புனைந்தார்.1956 இல் ‘தெனாலிராமன்’* படத்திற்கு வசனம் பாடல்களை கண்ணதாசனே வரைந்தார்.
தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய அவர், 1956 இல் ‘நானே ராஜா’ மற்றும் ‘மதுரை வீரன்’ ஆகியப் படங்களுக்கு திரைக்கதை வசனமும் பாடல்களையும், 1957 இல் ‘மகாதேவி’* படத்திற்கு வசனமும் பாடல்களையும் அமைத்தார்.
தொடர்ந்து, ‘கன்னியின் சபதம்’, ’நாடோடி மன்னன்’,
‘சிவகங்கைச் சீமை’, ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, ‘வீரக்கனல்’, ‘கவலையில்லாத மனிதன்‘, ’திருடாதே’, ‘ராணி சம்யுக்தா’, ‘இரத்தத்திலகம்’, ‘கறுப்புப் பணம்’, ‘லஷ்மி கல்யாணம்’ போன்ற பல படங்களுக்கு வசனமும் பாடல்களையும் எழுதினார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம் ராஜன், சிவகுமார் போன்ற பல கதா நாயகர்களின் எண்ணற்ற படங்களுக்கு ஏராளமானப்பாடல்களை கண்ணதாசன் வரைந்தார். கலைஞரின் ‘பராசக்தி’ படத்தில் நீதிபதியாக முதன் முதலில் நடித்த கண்ணதாசன், அதனையடுத்து ’கவலையில்லாத மனிதன்’, ‘இரத்தத் திலகம்’, ‘கறுப்புப் பணம்’, ‘சூரியகாந்தி’, ‘அபூர்வ ராகங்கள்’ ‘வேலும் மயிலும் துணை’* போன்றப் படங்களில் சில காட்சிகளில் தோன்றி நடிகனாகவும் தன்னை நிலை நாட்டினார். கருத்துச் செறிவான பாடல்களை இயற்றுவதில் கண்ணதாசன் தனித்துவம் பெற்றிருந்தார். தமிழகத்தின் அரசவைக் கவிஞராகவும் கண்ணதாசன் பொறுப்பாற்றியிருக்கிறார்.
அவரின் எண்ணற்ற பாடல்கள் இன்றளவும் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழியாப் புகழ் பெற்றவையாகும். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிக்காகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
அக்டோபர் திங்கள் 17 ஆம் நாளில் கண்ணதாசன் காலமானார்.
அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.
அவர் கடைசியாக கமலகாசன்-ஸ்ரீதேவி நடித்திருந்த ‘மூன்றாம் பிறை’ படத்திற்காக, “கண்ணே கலைமானே” என்றப் பாடலை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கண்ணதாசன் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நூல்கள், நவீனங்கள், கட்டுரைகள் என, பலவற்றை எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற பெருமைக்குரியவரும் கண்ணதாசனே! கண்ணதாசன் காலத்தால் மறக்க முடியாத காவியக் கவிஞன் என்பது மிகையன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =