கார் மோதி உயிரிழந்தவர் உடலை 1 கி.மீ., இழுத்து சென்ற கொடூரம்

புதுச்சேரி:இ.சி.ஆரில், கார் மோதி உயிரிழந்தவர், ஒரு கி.மீ., தொலைவுக்கு, சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், சாலை முழுதும் ரத்தமும் சதையுமாக சிதறிக்கிடந்தது. விபத்து ஏற்படுத்தி தப்பிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பொம்மையார்பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கடம்,54. பந்தல் அமைக்கும் தொழிலாளி. தினமும் காலை, சின்ன காலாப்பட்டு, இ.சி.ஆரில், புதுச்சேரி பல்கலைக் கழகம் எதிரில் உள்ள கடையில் டீ குடிப்பது வழக்கம்.நேற்று காலை 5:30 மணிக்கு, டீ குடித்துவிட்டு, நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த சிவப்பு நிற கார் ஒன்று, பல்கலைக் கழகத்தின் 2வது கேட் அருகே நடந்து சென்ற திருவேங்கடம் மீது பின்பக்கமாக மோதியது.மோதிய வேகத்தில், திருவேங்கடம் கார் சக்கரத்தின் இடையில் சிக்கினார். கார் நிற்காமல் சென்றதால், திருவேங்கடத்தின் உடல் சாலையில் உரசி, சாலை முழுவதும் ரத்தமும் சதையுமாக சிதறிக் கிடந்தது.சுமார் ஒரு கி.மீ., தொலைவுக்குப் பிறகு, பிள்ளைச்சாவடி அருகே, திருவேங்கடம் உடலை கார் சக்கரத்திலிலிருந்து வெளியே இழுத்து வீசி விட்டு, காரில் வந்தவர் தப்பிச் சென்றார்.சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கோரிமேட்டில் உள்ள வடக்கு போக்குவரத்து போலீசாருக்கு தெரிவித்தனர்.
திருவேங்கடம் உடல், தமிழக பகுதியான பிள்ளைச்சாவடியில் கிடந்ததால், ஆரோவில் போலீசார் விசாரிக்க வேண்டும் என புதுச்சேரி போலீசார் கூறி விட்டனர்.தகவலறிந்து வந்த ஆரோவில் போலீசார், விபத்து நடந்த இடம் புதுச்சேரி பகுதி என்பதால், அவர்கள்தான் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

எல்லை பிரச்னை காரணமாக, 2 மணி நேரமாக உடல் சாலையோரம் கிடந்தது.பின்னர் ஒரு வழியாக, புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய கார் குறித்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 16 =