காப்புறுதிச் சந்தா உயர்வுக்கான புகார்கள் அதிகரிப்பு

மருத்துவக் காப்புறுதிச் சந்தா தொகை 30லிருந்து 60 விழுக்காடு வரை திடீரென உயர்வுக் கண்டது தொடர்பில் மலேசியப் பயனீட்டாளர் சங்கங்கள் சம்மேளனத்திற்கு (போம்கா) 2 வாரத்திலேயே 495 புகார்கள் வந்து விட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி, சரவணன் தம்பிராஜா தெரிவித்தார்.நாட்டில் கடந்தாண்டு கோவிட் தொற்றுப் பரவத் தொடங்கியதிலிருந்து மருத்துவக் காப்புறுதிக்கான சந்தா தொகையை ஒருசில நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களில் ஏராளமானோர் வேலையிழந்து வருமானமின்றித் தவிக்கும் இவ்வேளையில் காப்புறுதி நிறுவனங்கள் இந்நடவடிக்கையைக் மேற்கொண்டிருக்கவே கூடாது. இந்நிறுவனங்கள் எந்தக் காரணத்திற்காகச் சந்தா தொகையை உயர்த்தியிருந்த போதிலும் பேங்க் நெகாரா கடுமையானக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். கடன் தொகையைச் செலுத்துவதை 3 மாதத்திற்கு ஒத்தி வைத்தது கூட பேங்க் நெகாராவால் இன்னும் விரிவாக எடுத்துரைக்கப்படவில்லை. இதனால் ஏராளமானோருக்கு இக்கடன் தொகை ஒத்தி வைப்புக் குறித்துத் தெரியாமல் இருக்கிறது. இதில் அணுக்கமானத் தொடர்பு ஏதுமில்லாதால் எங்களுக்கும் இதுபற்றிய மேல் விவரங்கள் எதுவும் தெரியாது. தற்போதுத் தொற்றுக் காலமாக இருப்பதால் பலர் வேலையின்றி, வருமானமுமின்றி இருக்கும் இந்நிலையில் காப்புறுதிச் சந்தா தொகையை உயர்த்த வேண்டாம் என்று அந்நிறுவனங்களிடம் நாங்களும் எடுத்துக் கூறி விட்டோம் என்று பேங்க் நெகாரா துணை கவர்னரிடம் இதுகுறித்த மகஜரைச் சமர்ப்பித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் நிகழ்நிலை வாயிலாகப் பேசிய போது சரவணன் தம்பிராஜா குறிப்பிட்டார். இதனிடையே, வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியச் சந்தா உயர்வுக் குறித்து அவர்களிடம் தெரிவிக்காமல் இருப்பது தமக்கு மிகவும் வருத்தமளிப்பதாக தேசியப் பயனீட்டாளர் புகார் சேவை மையத்தின் (என்.சி.சி.சி.) மூத்த நிர்வாகி, பாஸ்கரன் சிதம்பரம் தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்குச் சுமையை ஏற்படுத்தக்கூடியச் சந்தா தொகை உயர்வு குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வெ.50 உயர்த்தினாலும் அது அதிகப்படியான உயர்வாகும். அதனால் இந்த உயர்வுக் குறித்து அவர்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். சேவைக் கட்டணம் மற்றும் முழுமையானக் கட்டணத்தை உயர்த்துவதில் என்னதான் தங்களுக்கு அதிகாரம் இருந்த போதிலும் அதுபற்றித் தெரியப்படுத்துவதுதான் சிறப்பாகும். இதில் எத்தனை விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை பேங்க் நெகாராவும் கண்டறிந்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். நாடு இருக்கும் தற்போதைய நிலையில் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டும் காப்புறுதி நிறுவனங்கள், அவற்றின் நிறுவனச் சமூகக் கடப்பாட்டைக் கருத்தில் கொண்டு கட்டணக் கழிவு அல்லது சந்தா செலுத்துவதை ஒத்தி வைக்க முற்பட வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பாஸ்கரன் சிதம்பரம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =