காணாமல் போன நகரம் கோத்தா கெலாங்கி – மலாக்கா முத்துகிருஷ்ணன்

0

மலாயா தீபகற்பகத்தின் கீழ்க்கோடியில் ஜொகூர் மாநிலம். அங்கே கோத்தா திங்கி எனும் ஒரு புறநகர்ப் பகுதி. அதற்கு அப்பால் அடர்ந்த மழைக் காடுகள். அந்தக் காடுகளில் நட்ட நடு நாயகமாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் அரச மரங்கள். அந்த மரங்களுக்கு எத்தனை வயது என்று அந்த மரங்களுக்கே தெரியாது.
அந்த மரங்களைச் சுற்றிலும் பாழடைந்த கோட்டைக் கோபுரங்கள். 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி என்கிற சாய்ந்த கோபுரங்கள். உலகப்புகழ் ஸ்ரீ விஜய பேரரசின் சிதைந்து போன வரலாற்றுச் சுமைகள்.
இப்படிப்பட்ட பழைமையான கோட்டைகள் அங்கே இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியும். வேட்டைக்குப் போன குடிமக்களில் சிலருக்குப் பழைமையான கற்சிலைகள் கிடைத்து இருக்கின்றன.
அவற்றை எடுத்து வந்து விளையாட்டுப் பொருட்களாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பொருட்கள் எல்லாம் ஸ்ரீ விஜய பேரரசு காலத்தின் சிதைப் பொருட்கள் என்பது அந்த வெள்ளந்திகளுக்கும் தெரியாது.
2005-ஆம் ஆண்டில்தான் இந்த அதிசயம் வெளி உலகத்திற்கே தெரிய வந்தது. மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழ் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு உலகத்தையே பிரமிக்க வைத்தது.
கோத்தா கெலாங்கி என்பது ஸ்ரீ விஜய பேரரசின் புரதானத் தலைநகரம் ஆகும். இந்தோனேசியா சுமத்திராவில் கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1377-ஆம் ஆண்டு வரை செல்வச் செழிப்புடன் களை கட்டி வாழ்ந்த மாபெரும் பேரரசு.
வியாபாரம் செய்ய சீன நாட்டு வணிகர்கள் அங்கே போய் இருக்கிறார்கள். அராபிய வணிகர்களும் வணிகத் தொடர்புகளைக் கொண்டு இருக்கிறார்கள். உள்நாட்டு வணிகர்களும் பண்டமாற்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள். பூகிஸ் மக்களும் வணிகம் செய்து இருக்கிறார்கள்.
ஸ்ரீ விஜய பேரரசு என்பது அந்தக் காலத்தில் சுமத்திராவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் பேரரசு ஆகும். இந்த ஸ்ரீ விஜய பேரரசின் கிளை அரசாங்கங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் கோலோச்சி உள்ளன.

பேராக் புருவாஸ், பீடோர் பகுதிகளில் கங்கா நகரம் கெடாவில் கடாரப் பள்ளத்தாக்கு; கோத்தா கெலாங்கி புரதான நகரம்; பகாங் சமவெளி நகரம்; தாமரலிங்கா அரசு; பான் பான் அரசு. இப்படி நிறைய நகரங்கள் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்து உள்ளன.
கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளில் லிங்கியூ நீர்த் தேக்கம் இருக்கிறது. அருகில் சுங்கை மாடேக், சுங்கை லிங்கியூ ஆறுகள் ஓடுகின்றன. சிங்கப்பூருக்குத் தேவையான குடிநீர் இங்கே இருந்துதான் அந்தக் குடியரசிற்குப் போகிறது.
கோத்தா கெலாங்கி நிலப் பகுதி ஜொகூர் மாநிலத்திற்குச் சொந்தமானது. 140 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இருப்பினும் அந்த நீர்த் தேக்கத்தையும், அதைச் சுற்றி உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் தான் இன்று வரை பரமாரித்து வருகின்றது.
ஒரு நூறு வருடங்களுக்கு முன்னாலேயே சிங்கப்பூர் அரசு ஜொகூர் அரசுடன் குடிநீர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஜொகூர் மாநில அரசாங்கத்தின் அனுமதியுடன் சின்ன ஒரு சிங்கப்பூர் பிரதேச இராணுவமே அந்த லிங்கியூ காட்டுக்குள் இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், 2014-ஆம் ஆண்டில், ஜொகூர் உலு திராம் பகுதியில் மலாயாத் தமிழர் வரலாற்று மீட்பு எனும் ஒரு தன்னார்வ வரலாற்று ஆய்வுக் குழு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக கணேசன் என்பவரும் அவருடைய தோழர்களும் மீட்புச் சேவைகளைச் செய்து வருகிறார்கள். கோத்தா கெலாங்கி வரலாற்றுத் தேடலில் தீவிரமாகக் களம் இறங்கி உள்ளார்கள்.
வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைவர் கணேசன் கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளுக்குள் சென்று பல முறை பூர்வீகக் குடிமக்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். நேரடியாகப் பார்த்த கோட்டைச் சுவடுகளை ஆவணப் படுத்தி வருகிறார். அந்த வகையில் கணேசனின் அரிய முயற்சிகளினால் அங்கே அடர்ந்த காட்டிற்குள் புராதன கருங்கல் கோட்டை இருப்பதும் உறுதிப்படுத்தப் பட்டது.
உயரமான கருங்கற்களால் செதுக்கப்பட்ட பெரும் பெரும் தூண்கள்; சிதறிய சின்ன பெரிய கற்பாறைகள்; செங்குத்தான பாறைகள்; இராட்சச உயரமான பாறைகள் போன்றவற்றைக் கண்டு கணேசன் பிரமித்துப் போய் இருக்கிறார். படங்கள் எடுத்து இருக்கிறார்.
2012-ஆம் ஆண்டுகளில் கட்டுரையாளர் மலாக்கா முத்துக்கிருஷ்ணனும் அந்தப் பகுதிகளில் ஆய்வுகள் செய்து உள்ளார். பல நாட்கள் காட்டுக்குள் தங்கி சான்றுகளைச் சேகரித்து உள்ளார். அவர் எடுத்த படங்கள் டிஜிட்டல் முறையில் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் ஆய்வாளர் கணேசன் அவரின் ஆய்வுகளை சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். பார்க்கிறோம் செய்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள். நேற்று பார்த்தார்கள். இன்றைய வரைக்கும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தன் சொந்தச் செலவிலேயே கணேசன் ஆய்வுகளைச் செய்தார். செய்தும் வருகிறார். மலேசியத் தமிழ் இனத்தின் மீது தனி அக்கறை கொண்ட நல்ல ஒரு சமூகவாதி. இவரை மலேசியத் தமிழர்கள் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்; ஊக்குவிக்க வேண்டும். சொந்த முயசியில் இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்து வருகிறாரே. வாழ்த்துவதற்கு ஒரு மனசு வேண்டாமா.
மேலும் ஒரு வேதனையான செய்தி. நிதியுதவி கிடைக்காததால் இவரும் தன் ஆய்வுகளை இப்போது அப்படியே நிறுத்தி வைத்து இருக்கிறார். சமுதாயம்; சமூகம்; இனம்; மொழி என்று சிலர் வாய் நிறைய பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உதவி என்று வரும் போது அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். வேதனையாக உள்ளது. நம் நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் இயன்ற வரை ஆய்வாளர் கணேசனுக்கு உதவிகள் செய்ய வேண்டும். இதுவே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ரேய்மி செ ரோஸ் என்பவர் ஒரு மலேசிய வரலாற்று ஆய்வாளர். கோத்தா கெலாங்கியைப் பற்றிய சான்றுகளைத் திரட்டுவதற்கு பன்னிரண்டு ஆண்டுகள் ஆய்வு. உலகம் பூராவும் சுற்றி வந்து இருக்கிறார். கோட்டைக்கு மேலே விமானத்தின் வழி பறந்து வான்படங்களையும் எடுத்தார்.
தவிர அவருக்கு விண்வெளிப் படங்களும் கிடைத்தன. மனிதர் மிகவும் சிரமப்பட்டு கோத்தா கெலாங்கியின் சுவடுகளைத் தேடி இருக்கிறார்.

மெக்ரெஸ் என்பதை மலேசிய தொலைத் தொடர் உணர்வு மையம் என்று சொல்வார்கள். . இந்த மையத்தின் மூலமாகவும் விண்வெளிப் படங்கள் கிடைத்தும் உள்ளன.
இவருக்கு ’செஜாரா மலாயு’ வரலாற்று ஆவணங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. தவிர கோத்தா கெலாங்கி காடுகளில் வாழ்ந்த ஓராங் அஸ்லி பூர்வீகக் குடிமக்களிடம் இருந்தும் நிறைய தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.
அதைக் கொண்டு 2004-ஆம் ஆண்டில் ’கோத்தா கெலாங்கி காணாமல் போன நகரம்’ எனும் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார்.
ஆசிய ஆய்வுக் கழகம்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
மலேசிய பாரம்பரியக் கழகம்
மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்
போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த வரலாற்று நிபுணர்களிடம் தன் ஆய்வுகளைச் சமர்ப்பித்து இருக்கிறார்.
பத்திரிகைகளும் ’காணாமல் போன நகரம்’ எனும் தலைப்பில் விரிவான செய்திகளை வெளியிட்டன. 2004-ஆம் ஆண்டில நடந்தது. கடைசியில் ரேய்மி செ ரோஸ் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார்.
கோத்தா கெலாங்கி என்பது இந்திய மயமான பேரரசு என்பது தெரிய வந்தது. அனைத்து மலேசிய நாளிதழ்களுக்கும் தெரிய படுத்தினார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து 2006 ஏப்ரல் 28-ஆம் தேதி, மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா ஒரு செய்தியை வெளியிட்டது. ’காணாமல் போன நகரம்’ என்று எதுவுமே இல்லை என்பதுதான் அந்தச் செய்தி.
அப்போது மலேசிய தொல்பொருள் அருங்காட்சியகக் கழகத்தின் காப்பாளராக காலீட் செயட் அலி (என்பவர் இருந்தார்.
அவர் சொன்னார்: நாங்கள் ஓராண்டு ஆய்வு செய்து பார்த்தோம். காணாமல் போன நகரம் என்று எந்த அடையாளமும் கிடைக்கவில்லை; எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சொன்னார்.
அதோடு கோத்தா கெலாங்கியின் அத்தியாயம் கிடப்பில் போடப் பட்டது. இனிமேல் தான் தூசு தட்டிப் பார்க்க வேண்டும். விடுங்கள். அரசியல் கூத்துகளைப் பார்க்கவே நமக்கு நேரம் போதவில்லை. இதில் கோத்தா கெலாங்கியாவது? கோத்தா திங்கியாவது?
ரேய்மி செ ரோஸ் விடவில்லை. மீண்டும் சான்றுகளை முன்வைத்தார். ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீண்டும் சொல்லப் பட்டது. சொல்லி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும்தான் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
கோத்தா கெலாங்கி விவகாரம் ஊறப் போட்டு, காயப் போட்டு, ஆறப் போட்டு, தொங்கப் போடப் பட்டு உள்ளது. மகிழ்ச்சி. இங்கே இந்தச் சொல்லுக்கு வேறு என்ன சொல்லைப் பயன்படுத்துவது என்றும் எனக்குத் தெரியவில்லை. மண்டை காய்ந்து விட்டது.
1900-ஆம் ஆண்டுகளிலேயே கோத்தா கெலாங்கியைப் பற்றிய இரகசியங்கள் கசியத் தொடங்கி விட்டன. 1881-ஆம் ஆண்டு டட்லி பிரான்சிஸ் ஹார்வே எனும் ஓர் ஆங்கிலேயர், நேரடியாகச் சென்று பார்த்து இருக்கிறார். அங்கே ஓர் அங்கோர் வாட் புதைந்து கிடக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

அதன் பின்னர் 1920-ஆம் ஆண்டில், சர் ரிச்சர்ட் வின்ஸ்டெட் என்பவரும் அதை உறுதி படுத்தி இருக்கிறார்.
ஆக ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே கோத்தா கெலாங்கியைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். அதைப் பற்றி யாரும் அக்கறை பட்டதாகவும் தெரியவில்லை. உருப்படியான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை. சோற்றுக்குச் சுண்ணாம்பு பூசுவதிலேயே நேரத்தைக் கடத்தி விட்டார்கள். அதைப் பார்த்துத் தான் ஜப்பான் காலத்து அரிசியில் சுண்ணாம்புக் கலக்கும் வித்தை அறிமுகமானது போலும்.
கம்போடியாவில் இருக்கும் அங்கோர் வாட்; சுமத்திராவில் இருக்கும் போரோபுதூர் ஆலயங்களைக் காட்டிலும் கோத்தா கெலாங்கி மிக மிகப் பழமை வாய்ந்தது என்று மலேசிய ஆய்வாளர் ரேய்மி செ ரோஸ் சொன்னார்.
அவர் ஆய்வுகள் செய்யும் போது, கோத்தா கெலாங்கியின் மதில் சுவர்கள் நிறையவே சேதம் அடைந்து காணப் பட்டன. இருந்தாலும் உள்ளே கட்டடங்கள்; சுவர்கள்; கல்லறைகள்; நிலவறைகள் இன்னும் புதைந்த நிலையில் கிடக்கின்றன என்றும் உறுதியாகச் சொன்னார்.
ஒரு காலத்தில் கோத்தா கெலாங்கி ஒரு வியாபார மையமாக இருந்து இருக்கிறது. தவிர புத்த மதக் கல்விக் கேள்விகளின் தலைமை மையமாகவும் விளங்கி இருக்கிறது.

செஜாரா மெலாயு என்பது பழம் பெரும் நூல். இது 1500 ஆண்டு கால வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட ஒரு காப்பியம். அதில் கோத்தா கெலாங்கியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன.
ஜொகூர் ஆற்றின் வடக்கே மேல் பகுதியில், கோத்தா கெலாங்கியின் பிரதான கோட்டை இருந்து இருக்கிறது. அந்தக் கோட்டை கரும் கற்களால் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. கெலாங்கி எனும் சொல் ஒரு தாய்லாந்துச் சொல்லாகவும் இருக்கலாம் என்றும் செஜாரா மெலாயு குறிப்புகள் சொல்கின்றன.
அந்தப் பகுதியில் சில கல்வெட்டுகள் கிடைத்தன. அவை தமிழ் மொழியில் எழுதப் பட்டவை. 1025-ஆம் ஆண்டு இராஜேந்திர சோழன், இந்தக் கோத்தா கெலாங்கியின் மீது படையெடுத்தார் என்று ’செஜாரா மலாயு’ ஆவணங்கள் சொல்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =