காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகள் பதிவு

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் சமூக வலைத்தளம் மூலம் ஏராளமான பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். மேலும், பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த வகையில் காசி பல பெண்களை சீரழித்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் காசி மீது கந்து வட்டி வழக்கு, போக்சோ மற்றும் பாலியல் என மொத்தம் 7 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி, அவருடைய நண்பர்கள் தினேஷ், டேசன் ஜினோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கந்து வட்டி வழக்கில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பர் டேசன் ஜினோ ஆகியோர் சமீபத்தில் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் பெண்களை மிரட்டிய வழக்கில் காசியின் நண்பரான நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வாலிபர் தற்போது வெளிநாட்டில் உள்ளதால், அவரை இந்தியா வரவழைத்து விசாரணையை துரிதப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை உயர் தொழில்நுட்பம் மூலம் போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து, காசியின் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களான ஆடியோ, வீடியோ போன்றவற்றை அழித்தது தொடர்பாக மேலும் 4 வழக்குகள் தங்கபாண்டியன் மீது பதிவாகி உள்ளது. மகனை காப்பாற்ற அவர் தான் ஆவணங்களை அழித்ததாகவும், இதனால் அவர் மீது வழக்குபதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − nine =