கல்வி விவகாரத்தில் அரசியல்வாதிகள் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது

கல்வி என்பது புனிதமான ஒன்று. இந்திய சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் அதேவேளையில் அதன் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் வல்லமையும் கல்விக்கு மட்டும்தான் உள்ளது. ஆகவே கல்வி குறித்த விவகாரங்களில் அரசியல் தலையீடு கட்டாயம் இருக்கக்கூடாது. அந்தந்த துறைகளில் இருக்கும் அமைச்சர்கள் அவர்கள் துறை சார்ந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது அனைவருக்கும் நல்லது என்று ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
நேற்று செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் ஓம்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டிலும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா மற்றும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் நடைபெற்ற யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான தங்கப் பதக்கம் அணிவிப்பு நிகழ்வில் திறப்புரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்திய சமுதாயம் கல்வி- கேள்விகளில் பிந்திய சமுதாயமாக இருக்கக்கூடாது என்ற வகையில் கடந்த 14 ஆண்டுகாலமாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஓம்ஸ் அறவாரியம் தங்கப்பதக்கம் அணிவித்து சிறப்பித்து வருகிறது.
ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்த தங்கப் பதக்க விழா இடைப்பட்ட காலத்தில் பல அரசியல் அச்சுறுத்தல்களாலும் ஆசிரியர்கள் மீது அரசுவழி காட்டப்பட்ட அதிகாரத்துவ ஏவலாலும் சுமார் ஆறு ஆண்டுகள் இவ்விழா தடைபட்டுப்போனது. இருந்தபோதிலும் நாட்டுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் நற்பெயரை ஏற்படுத்தித் தந்த யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி கௌரவிக்க ஓம்ஸ் அறவாரியம் எடுத்துக் கொண்ட முயற்சியை கைவிடவில்லை.


எனவே, விடுபட்டு போன தங்கப் பதக்க விழா குறிப்பாக 2016, 2017,2018ஆம் ஆண்டுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இவ்வாண்டு தங்கப் பதக்கங்களையும், வெள்ளிப் பதக்கங்களையும் அணிவித்து கௌரவிப்பதில் ஓம்ஸ் அறவாரியம் மகிழ்ச்சி கொள்கிறது என்றார் அவர். அத்துடன் 2019ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்க ஓம்ஸ் அறவாரியம் முன் வந்துள்ளது.
ஆக, இவ்வாண்டு 327 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் 780 மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களையும் நாங்கள் அணிவிக்கவுள்ளோம். இந்தப் பதக்கங்கள் அவர்களின் இடைநிலைப்பள்ளி வாழ்க்கைக்கு மேலும் உந்துதல் சக்தியாகவும் ஊக்குவிப்பாகவும் இருக்கும் என்று ஓம்ஸ் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி வித்திடும் கல்வி குறித்த விவகாரங்களில் அரசியல்வாதிகள் எக்காரணத்தை கொண்டும் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. கடந்த காலங்களில் ஓம்ஸ் அறவாரியம் மேற்கொண்ட அத்தனை முயற்சிக்கும் அரசியல் பின்னணியிலிருந்த ஒரு துணையமைச்சர் குறுக்கீடாக இருந்து வந்தார். அதனால், மாணவர்களுக்கு நாங்கள் செய்யவிருந்த அனைத்து விதமான நற்காரியங்களும் தடைபட்டுப் போயின.


ஆனால், இப்போதுள்ள நிலை வேறு. புதிய அரசாங்கத்தில் எங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படுகின்றன. அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரே நேரடியாக வருகை புரிந்துள்ளார். அவரைப் போல அனைத்து அரசியல்வாதிகளும் கல்வித் தொடர்பான விஷயங்களில் ஆதரவு அளித்தால் இன்னும் அதிகமான சேவைகளை புரிய செய்ய ஓம்ஸ் அறவாரியம் காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார். அதே வேளையில் கடந்த காலங்களைப் போன்று ஆசிரியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் துதி பாடாமல் தங்களின் கொள்கையிலும், குறிக்கோளிலும் திடமாக இருத்தல் அவசியமாகும். மாதா, பிதாவுக்கு அடுத்து ஆசிரியரையே அனைவரும் தெய்வமாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட புனித தொழிலில் இருக்கும் நீங்கள் ஒருபோதும் அத்தொழிலுக்கு துரோகம் இழைக்கக்கூடாது என்றும் ஓம்ஸ் தியாகராஜன் தமது திறப்புரையில் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − three =