கல்வியில் பின் தங்கிய மாணவர்களின் வாழ்க்கை தரம் உயரும்-மை ஸ்கில்

கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு தொழில் திறன்களை கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றும் நோக்கில் மை ஸ்கில் அறவாரியம் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்ப களும்பாங் மை ஸ்கில் அறவாரியத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருவதாக அதன் தோற்றுநரும் வழக்கறிஞருமான பசுபதி தெரிவித்தார்.

35 ஏக்கர் நிலப்பரப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த அறவாரியத்தில் சுமார் 150 மாணவர்கள் பயில்கின்றனர். கல்வியில் ஆர்வமில்லாதவர்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என பல்வேறு குடும்பச் சூழ்நிலையைக் கொண்டிருக்கும் மாணவர்களே இங்கு பயில்கின்றனர்.

இங்கு இவர்களுக்கு மின்னியல், முடிதிருத்தல், வெல்டிங், இரசாயணம் இல்லாத விவசாயம் என பல தொழில் திறன் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. அடுத்தாண்டு தொடக்கத்தில் மாணவிகளுக்காக சிகை அலங்காரம், பேக்கிரி போன்ற வகுப்புகளும் தொடங்கவுள்ளது. இவர்கள் பிற்காலத்தில் சிறந்த தொழில்முனைவர்களாக உருவாக்கப்படுவதற்காகவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இங்கு பயிலும் மாணவர்கள் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் தாங்கள் பயிலும் கல்வி திறனிற்கேற்ப மாற்றிக்கொள்கின்றனர். அவர்களிடம் ஏற்படும் நல்ல மாற்றத்தை அவ்வபோது காண முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை களும்பாங் மை ஸ்கில் அறவாரியத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கொண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் அறவாரியத்தின் மாணவர்களுடன் இணைந்து பங்சார் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நடனம், நாடகம் என படைப்புகளை வழங்கினர்.

அரசாங்க ரீதியில் மை ஸ்கில் அறவாரியத்திற்கு நல்ல ஆதரவு இருக்கிறது. மனிதவள அமைச்சர் குலசேகரன் தலைமையில் இயங்கும் ‘எச்ஆர்டிஎப்’ பல உதவிகளை செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி கீழ் இயங்கும் மித்ரா அமைப்பின் வாயிலாகவும் உதவிகளை பெறவிருப்பதாக பசுபதி தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 6 =