கருங்கடலில் ரஷ்ய போர்க் கப்பல்களில் இருந்து கீவ், லிவிவ் மீது ஏவுகணைத் தாக்குதல்

ரஷ்யா மீண்டும் மீண்டும் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உலக தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தனது போர் கப்பல்கள் மூலமாக உக்ரைன் தலைநகர் கீவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடம், போர் விமானங்கள் பழுது பார்க்கும் ஆலை தகர்க்கப்பட்டன.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் பதுங்கியுள்ள இடங்கள், அரசு மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து குண்டுவீசி தாக்குதல் நடத்துகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பலர் இப்போரில் கொல்லப்பட்டு வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடின் மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஐநா.வில் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும், போரை நிறுத்தாத ரஷ்யா 23வது நாளாக நேற்று தனது தாக்குதலை தொடர்ந்தது. உக்ரைன் தலைநகர் கீவ், லிவிவ், கார்கிவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய படைகள் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தின. குறிப்பாக, போலந்து எல்லையை ஒட்டி அமைந்துள்ள லிவிவ் நகரத்தின் மீது முதல் முறையாக கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய போர் கப்பல்களில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று காலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் லிவிவ் நகரின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ள போர் விமான பழுதுபார்க்கும் ஆலை ஒன்றும், பஸ் பழுது பார்க்கும் ஆலையும் வெடித்துச் சிதறின. இங்கு முன்னதாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு 3 குண்டு சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த இந்த ஏவுகணை தாக்குதலில் அருகில் இருந்து வீடுகள் அதிர்ந்ததால் அங்கிருந்த மக்கள் பீதியில் உறைந்தனர். கருங்கடல் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 6 ஏவுகணைகளில், 2 இடைமறித்து அழிக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தனது பேஸ்புக்கில் கூறி உள்ளது. இதே போல், தலைநகர் கீவின் வடக்கு எல்லைப் பகுதிகளில் சரமாரி தாக்குதல் நடந்தது. இங்குள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது குண்டு வீசப்பட்டதில், ஒருவர் பலியானார். 98 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். கார்கிவ் அருகே உள்ள மெரேபாவில், ரஷ்ய பீரங்கிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் பள்ளி, சமூக மைய கட்டிடம் தரைமட்டமானது. இதில் 21 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்தார். செர்னிஹிவ் விடுதியின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், தாய், தந்தை மற்றும் 3 வயது இரட்டைக் குழந்தைகள் உட்பட மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, போர்நிறுத்த பேச்சுவார்த்தையை உக்ரைன் அதிகாரிகள் வேண்டுமென்றே இழுத்தடிக்க முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றம்சாட்டி உள்ளார். ‘‘நம்ப முடியாத பரிந்துரைகளை முன்வைத்து, பேச்சுவார்த்தையை நிறுத்துவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் உக்ரைன் முயற்சிக்கிறது. இருப்பினும் ரஷ்ய தரப்பு கொள்கை ரீதியான அணுகுமுறைகளுக்கு ஏற்ப தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்கிறது’’ என புடின் கூறி உள்ளார். இதுவரை போர் காரணமாக சுமார் 40 லட்சம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து உள்ளனர். இதில் போலந்தில் மட்டுமே 2 லட்சம் பேர் குடியேறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =