கயானா நாட்டின்
கலப்புத் தமிழர்கள்
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

உலகில் ஏழு கண்டங்கள். ஆசியா; ஆப்பிரிக்கா; ஐரோப்பா; வட அமெரிக்கா; தென் அமெரிக்கா; ஆஸ்திரேலியா; அண்டார்டிக்கா. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வரையில் ஆறு கண்டங்கள். அதற்கு முன்னர் ஐந்து கண்டங்கள். மிக அண்மையில் தான் ஐரோப்பா தனிக் கண்டமாக அங்கீகாரம் பெற்றது.

பல நாடுகளின் பாட நூல்களில் ஏழு கண்டங்களாகக் கற்பிக்கப் படுகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகலின் பாடப் புத்தகங்களில் பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே ஆறு கண்டங்கள் என்பதை ஏழு கண்டங்களாக மாற்றி விட்டார்கள். உண்மையை உண்மையாக ஏற்றுக் கொண்டு உலகப் பார்வையில் பார்க்கின்றார்கள். பயணிக்கின்றார்கள்.

இங்கே இந்தப் பக்கம் பயன்படுத்தப்படும் பாட நூல்களைப் பற்றி தெரியவில்லை. இன்றைக்கு இருக்கும் தகவல் நாளை இருக்குமா. பெரிய கேள்விக்குறி. அதனால் கருத்துகள் சொல்ல நமக்கும் தகுதி இல்லை. பெரிய இடத்து விவகாரம். போட்டுக் கொடுக்க நல்லவர்கள் சிலர் இருக்கலாம். வேண்டாங்க. நம்ப கட்டுரைக்கு வருவோம்.

கயானா நாடு தென் அமெரிக்காவின் வட பகுதியில் உள்ளது. மேற்குப் பகுதியில் வெனிசூலா நாடு. கிழக்குப் பகுதியில் சுரிநாம் நாடு. தெற்கே பிரேசில். வடக்கே அட்லாண்டிக் பெரும் கடல். கயானா நாட்டின் பரப்பளவு 215,000 சதுர கிமீ (83,000 சதுர மைல்). மலேசியாவில் இருந்து 17,655 கி.மீ. தொலைவில் உள்ளது. கொஞ்ச நஞ்ச தூரம் அல்ல.

ஓர் எடுத்துக்காட்டு. மலேசியாவிற்கும் சென்னைக்கும் இடைப்பட்ட தூரம் 2,606 கி.மீ. (1,619 மைல்கள்). அந்தக் காலத்தில் சென்னையில் இருந்து கயானா நாட்டிற்குப் பாய்மரக் கப்பல்களில் பயணம் செய்து இருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு மேல் பிடித்து இருக்கிறது.

அங்கு வாழும் இந்தியர்களை இந்தோ – கயானியர் (Indo-Guyanese) என்று அழைக்கிறார்கள். அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 1838-ஆம் ஆண்டு, இந்தியாவின் பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் குடியேறியவர்களின் சந்ததியினர்.

கயானா நாட்டின் மொத்த மக்கள் தொகை 786,552. அவர்களில் 43.5 விழுக்காடு இந்தியர்கள். 2020-ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழர்கள் நான்கு விழுக்காடு. 19,663 பேர்.

1830-ஆம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து கயானாவிற்குக் கொண்டுவரப்பட்ட அடிமைகளுக்கு விடுதலை. அடிமைத்தனம் சட்டவிரோதம் என அமலுக்கு வந்தது. தவிர விடுதலை பெற்ற கறுப்பின அடிமைகள், அவர்கள் எங்கு வாழலாம்; எப்படி வாழலாம் என்பதை அவர்களே தேர்வு செய்யும் முடிவு அவர்களிடமே வழங்கப் பட்டது.

பலர் பக்கத்திலேயே சொந்தமாக வீடுகளைக் கட்டிக் கொண்டு கரும்புத் தோட்டங்கள் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. சிலர் பட்டது போதும் சாமி; வெள்ளைக்காரர்கள் சொன்னது மாதிரி செய்ய மாட்டார்கள். மறுபடியும் அடிமை விலங்கை நீட்டுவார்கள். வேண்டாம் சாமி என்று கண்காணாமல் காட்டுப் பக்கம் ஓடிப் போய் விட்டார்கள்.

அதனால் கயானா கரும்புத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஆள் பற்றாக்குறை. இந்தப் பாவனையில் அவர்களின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியது. வெள்ளைக்காரர்கள் ஆசையில் தோசை சுடும் கலையில் ஆய கலை பார்த்தவர்கள். அழகு அழகாய்ப் பேசி இந்தியர்களை கயானா நாட்டிற்குக் கொண்டு சென்றார்கள். மெட்ராஸ், பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் சென்றார்கள். அடிமைத் தனத்தின் அரிச்சுவடியில் மறுபக்கம் அங்கே திருப்பிப் போடப் பட்டது.

என்னதான் ஒப்பந்தம், உரிமை, சலுகை எனும் கேசரி அல்வாக்கள் இருந்தாலும் அடிமைத்தனத்தின் மேல்பூச்சுக் கசாயம் இருக்கவே செய்தது. படிப்பறிவு குறைவு. அதுவே வெள்ளைக்காரர்களுக்குச் சாதகமாகிப் போனது. மலாயா ரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் எப்படி நரக வேதனையை அனுபவித்தார்களோ அதே போலத்தான் கயானா கரும்புத் தோட்டங்களிலும் தமிழர்கள் நரக நெருப்பில் காய்ச்சப் பட்டார்கள்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறை, பிரிட்டிஷ் கயானாவின் அடிமைத்தனத்திற்கு மாற்று மருந்தாக அமைந்தது. இந்த ஒப்பந்த முறை 75 ஆண்டுகள் நீடித்தது. அதில் பற்பல அநீதிகள்; பற்பல மனித உரிமை மீறல்கள்.

அடிமைத் தனத்திற்கும்; ஒப்பந்தம் செய்யப்பட்டு புலம் பெயர்ந்தவர்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு தோட்டத்தில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். தினசரி ஊதியம்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லலாம். ஆனால் சொந்தக் காசைப் போட்டுத்தான் போக வேண்டும். அதே சமயத்தில் மேலும் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் கயானாவில் தங்கினால் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லும் செலவை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

திரும்பிச் செல்ல விருப்பம் இல்லாதவர்கள் அங்கேயே சொந்தத் தொழில்களைத் தொடங்கலாம். அரசாங்கத்திடம் இருந்து கொஞ்சம் நிலத்தையும் கொஞ்சம் பணத்தையும் உதவியாகப் பெறலாம்.

1838-ஆம் ஆண்டில் 396 இந்தியர்கள் கயானாவில் குடியேறினார்கள். அடுத்த 80 ஆண்டுகளில் மொத்தம் 230,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து போய் இருக்கிறார்கள்.

அனைத்து ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கும் முதுகெலும்பாக விளங்கியவர்கள் இந்தியாவில் இருந்த தொழில்முறைத் தேர்வாளர்கள் தான். இவர்களை வட இந்தியாவில் “அர்காடிஸ்” என்று அழைத்தார்கள். தென்னிந்தியாவில் “மஸ்டரிஸ்” என்று அழைத்தார்கள்.

ஆள்சேர்ப்பு முறையில் மிரட்டல், வற்புறுத்தல் ஏமாற்றுதல் எல்லாம் ரொம்பவும் சகஜம். தயிர்ச்சாதத்தில் தக்காளிச் சாறைப் பிழிந்து போட்டால் எப்படி இருக்கும். அப்படித்தான். ஒரு செருகல்.

சுரினாம் தமிழர்கள் ஏமாற்றப் பட்டதை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆட்சேர்ப்பு செய்தவர்கள் சுரிநாம் நாட்டை ஸ்ரீ ராம் நாடு என்று கதை திரித்து இருக்கிறார்கள். இந்து தெய்வங்களின் பெயரைக் கொண்ட புனிதமான இந்துகளின் நாடு என்று சொல்லித்தான் தனிழர்களை அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அதையும் நம்பி தமிழர்கள் போய் இருக்கிறார்களே.

தெய்வ நம்பிக்கை முக்கியம். ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாமே. சிலையில் பால் வடிகிறது. சிலை கண் சிமிட்டுகிறது என்பது எல்லாம் நம்பிக்கையின் அவதாரங்கள். நம்புவதும் நம்பாததும் அவரவர் உரிமை. அந்த நம்பிக்கைகளைப் புண்படுத்துவது நம் நோக்கம் அல்ல. ஆனாலும் அந்த நம்பிக்கைகளில் ஒரு தெளிவு இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

கயானாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும்; அங்கு ஏற்கனவே இருந்து விடுதலையான ஆப்பிரிக்க அடிமைகளுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. குறைந்த ஊதியத்தில் தமிழர்கள் வேலை செய்தனர். அதனால் ஆப்பிரிக்க அடிமைகள் நிறைவான ஊதியம் பெறும் வாய்ப்புகளை இழந்தனர்.

கயானாவிற்கு வேலைக்குப் போன தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை. கடுமையான வெப்பம். மிருகத்தனமான வேலை. இந்த நிலைமைகளைச் சமாளிப்பதைத் தவிர வேறு வழியும் அவர்களுக்கு இல்லை.

கயானாவில் வாழும் தமிழ்ப் பெண்கள் தங்களின் கலாசாரத்தைப் பேணிக் காக்கின்றார்கள். கல்யாணம் காதுகுத்து எல்லாம் தமிழர் பண்பாட்டு முறையில் நடைபெறுகிறது. சாமி கும்பிடுவதும் தமிழர் வழக்க முறை. தவிர பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்கப் படுகின்றன.

1838 -1913-ஆம் ஆண்டுகளில், கயானா நாட்டிற்கு 500-க்கும் மேற்பட்ட கப்பல் பயணங்கள். இந்தியாவில் இருந்து 238,909 ஒப்பந்த தொழிலாளர்கள் கயானாவுக்குப் போய் இருக்கிறார்கள். தமிழர்கள் ஏறக்குறைய 12,000 பேர். இவர்களில் 75,898 பேர் இந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்டார்கள்.

பெரும்பான்மை மக்கள் வட இந்தியாவின் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். 62 விழுக்காட்டினர். இவர்களின் பேச்சு வழக்கு மொழி போஜ்புரி. இந்த மொழி கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு பீகாரில் பேசப் படுகிறது.

அடுத்து பீகார் மாநிலத்தில் இருந்து 21 விழுக்காட்டினர். வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் 6 விழுக்காட்டினர். ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 3 விழுக்காட்டினர். தமிழ்நாட்டில் இருந்து 4 விழுக்காட்டினர்.

தமிழர்கள் மெட்ராஸ் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஏறி இருக்கிறார்கள். தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் போராடி வருகிறார்கள். ஆங்காங்கே தமிழ் வகுப்புகளை நடத்துகிறார்கள்.

இந்துக்கள் 85 விழுக்காட்டினர். முஸ்லீம்கள் 15 விழுக்காட்டினர். கயானாவில் இந்தியர் வருகை தினம் என ஒரு விடுமுறை தினம் உள்ளது. 1838 மே 5-ஆம் தேதி. இந்தியாவில் இருந்து கயானா நாட்டிற்கு முதன்முதலில் வந்ததை நினைவுகூரும் வகையில் இந்தியர் வருகை தினம் கொண்டாடப் படுகிறது.

தமிழர்களிடம் பெண் பார்ப்பது; மாப்பிள்ளை பார்ப்பது எல்லாம் முன்பு காலத்தில் இருந்தது. பெற்றோர்கள் தான் பார்ப்பது போவது வருவது எல்லாம். 1960-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ரொம்பவும் அரிதாகி விட்டது. படித்த பிள்ளைகள் அவர்களாகவே காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதற்காக அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொள்வது வாடிக்கை.

நிறையவே கலப்புத் திருமணங்கள். நண்பர்கள் சொல்லக் கேள்வி. தமிழ் இளைஞர்கள் ஆப்பிரிக்கப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். வட இந்தியப் பெண்களையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கயானா நாட்டில் தமிழர்கள் இடையே கலப்புத் திருமணங்கள் மிகுதியாகி வருகிறது. அந்த வகையில் கலப்புத் தமிழர்கள் எனும் சொல் வழக்கும் அடிக்கடி அடி படுகிறது.

முன்பு சாதி சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பார்த்தார்கள். இப்போது அது எல்லாம் இல்லை. வாட் சாதி. வாட் நான்சென்ஸ் என்று திருப்பிக் கேட்கிறார்களாம். சாதி கீதி எல்லாம் வேண்டாம். ஓடிப் போய் தாலி கட்டிக்கலாமா என்பது சாதாரணமாகி வருகிறதாம். பொய் இல்லை. உண்மை.

இங்கே மட்டும் என்னவாம். அந்தக் கேஸ் தானே. எப்படியோ. நல்லா இருந்தால் சரி. எனக்கு சாதி விசயத்தில் உடன்பாடு இல்லை. பிள்ளைகள் யாரைத் திருமணம் செய்தாலும் நல்லா இருந்தால் சரி. அதுதான் என் நிலைப்பாடு.

மற்ற மற்ற நாடுகளை விட கயானா தமிழர்கள் ஓரளவிற்கு நன்றாக இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் சந்தோஷமாக வாழ்கிறார்கள். உலகின் சில பகுதிகளில் அரசியல்வாதிகளின் இனவாதப் பிச்சுப் பிடுங்கல்கள போல கயானாவில் இல்லை. மதவாதக் குண்டக்க மண்டக்க குடைச்சல்களும் இல்லை. சந்தோஷம்.

உலகின் எந்தப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக வாழ வேண்டும். கயானா தமிழர்களை வாழ்த்துவோம்.

சான்றுகள்:

  1. Sen, Sunanda. “Indentured Labour from India in the Age of Empire.” Social Scientist 44.1/2 (2016): 35-74
  2. “Indian social identity in Guyana, Trinidad, and the North American diaspora.” Wadabagei: A Journal of the Caribbean and its Diaspora 12.3 (2009)
  3. Lomarsh Roopnarine, “Indian migration during indentured servitude in British Guiana and Trinidad, 1850–1920.” Labor History 52.2 (2011): 173-191.
  4. From the Ancient Heartland of India to the New World by Aditya Prashad of Toronto, Canada

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here