கம்போங் பாரு நில உரிமையாளர்கள் கருத்துரைக்க கால அவகாசம் உண்டு

0

கம்போங் பாரு நில உரிமையாளர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க அடுத்த ஆண்டு வரை கால அவகாசம் உண்டு என்று தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் ரீனா ஹருண் நேற்று கூறினார். நிலத்தைக் கொள்முதல் செய்யும் சட்டம் பயன்படுத்துவது குறித்து கருத்து கேட்ட போது அவர் இத்தகவலைக் கூறினார்.
அந்நிலப் பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வருவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது. ஒரு சதுர அடிக்கு 1,000 ரிங்கிட் நஷ்ட ஈடு வழங்குவது குறித்து நில உரிமையாளர்கள் இரு தரப்பு சந்திப்பின் போது கருத்துரைக்கலாம். முடிவெடுப்பதற்கு இன்னும் அதிக அவகாசம் உண்டு.
முன்னதாக, நில உரிமையாளர்கள் அனைவரும் அரசாங்கத்தின் மேம்பாட்டுத் திட்டத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக நிலக் கொள்முதல் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சாமாட் கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் அரசாங்கம் கொள்முதல் செய்யும் ஒவ்வொரு சதுர அடி நிலத்துக்கும் ஆயிரம் ரிங்கிட்டில் 850 ரிங்கிட்டை ரொக்கமாகவும், 150 ரிங்கிட்டை முதலீட்டுப் பங்காகவும் வழங்க முன் வந்தது.
இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் சப்ரி யாக்கோப், பொதுப் பயன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு மட்டுமே கம்போங் பாரு நிலத்தைக் கையகப்படுத்த முடியும் என்று சுட்டிக் காட்டினார். அதாவது, வாணிக ரீதியான நோக்கத்துக்காக அச்சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.
பொதுவாக, அரசாங்கம் வழங்கும் நஷ்ட ஈட்டுத் திட்டத்தில் நில உரிமையாளர்கள் உடன்படுகிறார்கள் என்று ரீனா சுட்டிக் காட்டினார். ஆனால், தாங்கள் ஏமாற்றப்படுவோம் என்ற அச்சமும் அவர்களின் ஆள் மனதில் பதிந்துள்ளது. நீண்ட காலமாக அங்கு மேம்பாட்டைக் கொண்டு வருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அப்படி எதுவும் நடைபெறாமல் இருப்பதே அவர்களின் அச்சத்துக்குக் காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + eighteen =