கத்தி ஏந்தி வெறியாட்டம் நடத்தியவனிடமிருந்து மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர் நோர்ஸாவின் துணிச்சல்

0

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் செக்கிஞ்ஜானில் நடந்த சம்பவம் அது. வெறிகொண்ட ஓர் ஆடவன் பாராங்கத்தியை ஏந்திக்கொண்டு வெட்ட வந்தபோது, யார் எவர் என்று பாராமல் என்ன நிறம், என்ன மதம் என்று பாராமல் யோக் குவான் என்ற இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களைப் காப்பாற்றினார் நோர்ஸா அப்துல் கனி (வயது 55).
கூட்டரசுப் பிரதேச சிலாங்கூர் வர்த்தக தொழில்துறை சபை நடத்திய மைஹீரோ போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் அவர்.
செகு நோர்ஸா என்று இவர் அழைக்கப்படுகிறார். அன்று நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார். அந்த நபர் கத்தியை ஏந்திக்கொண்டு வெட்டவந்தபோது, மாணவர்கள் யார் என்ன… அவர்களின் நிறம் என்ன என்று நான் பார்க்கவில்லை. அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது முதல் சிந்தனையாக இருந்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பள்ளி மாணவர்கள் எனக்கு பிள்ளைகளாகவே மாறினர். 18 ஆண்டுகள் அந்தப்பள்ளியில் நான் படித்துக் கொடுத்தேன். அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் என்னோடு அணுக்கமான உறவைக் கொண்டிருந்தனர். அங்கு மத வேறுபாடுகளோ இன வேறுபாடுகளோ இல்லை.
அதனால்தான் யார் என்று பாராமல் போராடி அந்த நபரின் தாக்குதலை முறியடித்தேன். அப்போது எனக்கு வயது 35. அந்தச் சம்பவம் பற்றி உங்கள் உணர்வலைகள் என்ன என்று கேட்டால் மாணவர்கள் யாரும் காயமடையாமல் காக்க வேண்டும். அந்த மாணவர்களின் பாதுகாப்புத்தான் எனக்கு முக்கியமாக இருந்தது.
தாக்க வந்த நபர் மீது ஆத்திரம் மேலிட்டது. வெறிகொண்ட அந்த நபர் பல மாணவர்களைத் தாக்கிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் வேறிடத்தில் புதிய மாணவர்களைப் பதிவு செய்யும் பணியில் இருந்தேன். மாணவர்கள் உதவிகோரி கூச்சலிட்டபோது வெளியே வந்து பார்த்தேன். ஒரு நபர் மோட்டார் சைக்கிளைக் கொளுத்திக் கொண்டிருந்தார். ஒரு நீண்ட கத்தியை வைத்திருந்தார்.
நல்ல கட்டுமஸ்தான உடலுடன் இருந்த அந்நபர், வகுப்பறைக்குள் புக முயன்றார். மாணவர்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். என் கண்ணில் எதுவும் படவில்லை. அந்நபரின் உருவம் மட்டுமே தெரிந்தது. நான் அந்நபரிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவரை கேன்டினுக்கு அழைத்து வந்தேன். அந்நபரோடு சீனத்தில் உரையாடினேன்.
அவர் என்னையே தாக்க வந்தார். அவரை எதிர்கொள்ள 2 ஆரஞ்சு போத்தல்களை வைத்துக்கொண்டு அவரை எதிர்க்கத் துணிந்தேன். அந்நபர் அடங்க ஆரம்பித்தார்.
படிப்படியாகப் பேசி அவரது கத்தியைப் பறித்தோம். காவல்துறை வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தின் போது நான் காப்பாற்றிய பிள்ளைகள் இன்றும் என்னிடம் அன்பைப் பாராட்டுகின்றார்கள் என்று கூறுகிறார் மைஹீரோ விருது பெற்ற செகு நோர்ஸா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =