கதிர்காம பாலதண்டாயுதபாணி கோவில்- நாகப்பட்டினம்

0

தமிழ்நாட்டில் நம்முடைய நிகழ் காலத்தில் வாழ்ந்து சித்தியடைந்த மகான்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பூண்டி மகான் ஸ்ரீசத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள், திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மகரிஷி, வள்ளிமலை சித்தினாந்த சுவாமிகள், சீர்காழி கதிர்காம சுவாமிகள் ஆகியோர். இவர்கள் சித்தியான இடம் புனிதம் பெற்று, வேண்டும் பக்தர்களுக்கு வரம் தரும் தலங்களாக இன்றும் விளங்கி வருகிறது.

இவர்களில் சீர்காழி கதிர்காம சுவாமிகள் கட்டிய முருகன் ஆலயம் ஒன்று, சீர்காழி தென்பாதியில் கைவிளாஞ்சேரி பகுதியில் உள்ளது. ‘கதிர்காம பாலதண்டாயுதபாணி ஆலயம்’ என்பது இந்தக் கோவிலின் திருப்பெயராகும். அழகிய இந்த ஆலயம் பிரதான சாலைக்கு சற்றே உள்ளடங்கி மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

சுமார் 90 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். அழகான வண்ண முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மணிமண்டபமும், அதைத் தொடர்ந்து மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தின் நடுவே பிரார்த்தனை தீபம், பீடம் ஆகியவற்றுடன் சிந்தாமணி விநாயகர் அருள்பாலிக் கிறார்.

அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் சிற்றம்பல விநாயகர், பேரம்பல விநாயகர் அருள்பாலிக்க கருவறையில் இறைவன் கதிர்காம பால தண்டாயுதபாணி, நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ மேல் திசை நோக்கி அருள்பாலிக் கிறார். எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாக, இங்கு முருகன் பிரதிஷ்டை செய்திருக்கும் பீடத்தின் கீழ் நூதன முறையில் யந்திர பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார், கதிர்காம சுவாமிகள். முருகப்பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பீடத்தின் கீழ், ஜலயந்திரம் சுழன்று கொண்டே இருக்கும்.

மகாமண்டபத்தின் மேற்கில் நால்வர், அருணகிரிநாதர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. வடக்கில் நடராஜர், சிவகாமி அம்மன், வேணு கோபாலன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். முருகப்பெருமான் உற்சவ திருமேனியும் தனி சன்னிதியில் உள்ளது. கிழக்கில் விநாயகர் அருள்பாலிக்கிறார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவர், இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக வேணுகோபால சுவாமியின் சிலையை பார்சலில் அனுப்பி வைத்தார் என்றும், அவர் யார் என்று அறிய முடியவில்லை என்றும் கூறும் ஆலய நிர்வாகத்தினர், அந்த சிலையின் அற்புத படைப்பைக் கண்டு மகாமண்டபத்தில் அதனை பிரதிஷ்டை செய்த தாகவும் கூறுகின்றனர்.

இங்கு கந்தசஷ்டி விழா, 6 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் 5 நாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் 6-ம் நாள் சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் அன்று 108 பால்குட அபிஷேகம் மூலவருக்கு நடைபெறும். மாத சஷ்டிகளில் முருகனுக்கு அவல் பாயசம் நைவேத்தியம் செய்யப்பட்டு அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். மாதக் கிருத்திகை நாட்களில் சபண ஹோமம் நடைபெறுகிறது.

வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு மாம்பழ அர்ச்சனை நடைபெறுவதுடன், அந்த பழங்களை பக்தர் களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருநாளின் போது, இலுப்பை எண்ணெயில் 1008 தீபமேற்றி ஆலயத்தை ஒளிமயமாக திகழ வைக்கின்றனர். மகாமண்டப மத்தியில் உள்ள கண் கவர் பிரார்த்தனை விளக்கில், 155 திதியுடன் தீபமேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.

தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

சீர்காழி வந்து கதிர்காம பால தண்டாயுத பாணியை தரிசிப்பவர்கள், தவறாது சுவாமியின் அதிஷ்டானத் திருக்கோவிலையும் தரிசிக்கலாம்.

அமைவிடம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 1 கி.மீ தொலைவில் கைவிளாஞ்சேரியில் உள்ளது இந்த ஆலயம்.
தொடர்புக்கு – +91 9865556488

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =