கண்ணியம் தவறாமல் தைப்பூசத்தை கொண்டாடுவோம்

வரும் 7ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரையில் சுங்கை பட்டாணியில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற நோக்கில் நேற்று முன்தினம் நகராண்மைக்கழக அலுவலகத்தில் அனைத்து அரசாங்க இலாகாவின் அதிகாரிகள், மலேசிய இந்து சங்கம், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தான நிர்வாகம் உள்ளிட்ட பல அரசு சார்பற்ற இயக்கங்களுடன் கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சண்முகம் ரெங்கசாமி ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

இம்முறை பக்தர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி சுமார் 850க்கும் மேற்பட்ட காவல் படையினர் கட்டம் கட்டமாக பணியில் அமர்த்தப்படுவர். ஆங்காங்கே காவல் படையினரின் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்களின் புகார்களையும் அங்கே செய்யலாம் என்றார் அவர். இவ்வாண்டும் வழக்கம் போல வாணவேடிக்கை, பட்டாசு விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அனுமதியையும் இடத்திற்கான கட்டணத்தையும் முன்னமே செலுத்தியிருக்க வேண்டும்.

தைப்பூசம் முடிந்தவுடன் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான பணியாளர்கள் ஆங்காங்கே நியமிக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் கடப்பாடோடு நடந்து கொண்டால் கூடுமான வரை குப்பைகளை தவிர்க்க முடியும். கண்ணியத்துடன் திருநாளை கொண்டாடி மகிழ சினிமா பாடல்களோ, கலாசார சீரழிவு நிகழ்வுகளோ நடைபெறாமல் இருப்பது தொடர்ந்து உறுதி செய்யப்படும். அதையும் மீறி நடந்து கொள்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 12 =