கடுமையான எஸ்ஓபி தேர்தல் பிரசாரத்தைத் தடுத்து விட்டது

மலாக்கா மாநிலத் தேர்தலில் கடுமையான வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் விதிக்கப்பட்டதால் வழக்கமான பிரசாரத்துக்குத் தடையானது. இதனால், இது ஜனநாயகத்திற்கு எதிர்மறையானது என அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். வேட்பாளர்களிடம் வெளிப்படையான பரப்புரை செய்யத் தடை விதிக்கப்பட்டது. தொகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்க வேட்பாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால், கட்சிகள் தங்களின் தேர்தல் கொள்கை, திட்டங்களைப் பற்றி வாக்காளர்களுக்கு விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. எனவே, கடுமையான எஸ்ஓபியை அகற்ற வேண்டுமென்று கோருவதாக அவர் கேட்டுக் கொண்டார். மலாக்காவை அடுத்து சரவாக் மாநிலத் தேர்தலிலும் இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது உறுதியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அன்வாரின் கூற்றை ஆமோதித்த செபூத்தே பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக், வீடுகளுக்குச் சென்று வேட்பாளர்களைச் சந்தித்து தங்களின் கொள்கை அறிக்கையை தெளிவாகச் சொல்ல தடை விதிக்கப்பட்டது அராஜகம் என்று சாடினார். தேர்தல் ஆணையம் அது பற்றி எல்லா அரசியல் கட்சிகளையும் அழைத்து கலந்தாய்வு செய்வதில் ஏன் தயக்கம் என்றும் அவர் வினா எழுப்பினார். வேட்பாளர்களின் புகைப்படங்களை மட்டுமே வெளியிட வேண்டுமென்ற உத்தரவு இருக்கும்போது, முஹிடின் யாசினின் புகைப்படம் பெரிய அளவில் வர்த்தக விளம்பரத் தட்டிகளில் மலாக்கா முழுவதும் வைக்க தேர்தல் ஆணையம் அனுமதித்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பொதுமக்கள் கட்சிச் சின்னங்களை அவற்றின் வண்ணங்களில் பார்ப்பது வழக்கமானது. வாக்குச் சீட்டுகளில் வெறும் கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்டிருந்ததால், தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர்களின் புகைப்படங்களை தெளிவாகக் காண முடியாது சிரமத்துக்கு உள்ளானதாகவும் திரேசா தெரிவித்தார். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − four =