கடாரம் பூஜாங் சமவெளியில்
கண்ணீர் வடிக்கும் கலைத்தளம்
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள். இது வரலாற்றுச் சுவடுகளில் வந்து போகும் நல்ல ஒரு வசனம். அதே வசனத்தை இந்தப் பக்கம் கடாரத்தில் திருப்பிப் போட்டுப் பார்த்தால்; வந்தார்கள் பார்த்தார்கள் உடைத்தார்கள். விக்கல் வந்து மூச்சு அடைக்கும் வசனம்.

கிரேக்க நாட்டு அலெக்சாண்டர் கிழக்கு ஆசியா பக்கம் வந்தார். இந்தியாவின் சிந்துவெளி மாம்பழங்களில் மயங்கிப் போனார். கூடைக் கூடையாகக் கொண்டு போனார். சாப்பிட்டுச் சாப்பிட்டு பாரசீகத்தில் காய்ச்சல் வந்து இறந்து போனார். ரோமாபுரி ஜுலியஸ் சீசர் எகிப்திற்குச் சென்றார். கிளிமூக்கு கிளியோபாட்ராவைப் பார்த்தார். கொத்திக் கொண்டு போனார்.

விஜயத் துங்க வர்மரின் மூதாதையர்கள் கடாரத்திற்கு வந்தார்கள். அழகு அழகான கலைக் கோயில்களைக் கட்டிப் போட்டார்கள். அற்புதமான கலைத் தலங்களைத் தட்டி எழுப்பினார்கள். இதற்குப் பெயர் வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள்.

அதே இடத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சிலர் வந்தார்கள். அவர்களிடம் மனிதம் மறுக்கும் மதவாதம். இனங்கள் வெறுக்கும் இனவாதம். இரண்டும் கலந்த பொல்லாத வாதம். கொரோனா கொலைவெறி ஆட்டம் போல தலைக்கு மேல் ஏறி ஜிங்கு ஜிக்கான் ஆடியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பாவம். இருப்பதை எல்லாம் இல்லாமல் செய்வது என்று பித்துப் பிடித்துப் போனது. இதற்குப் பெயர் வந்தார்கள் பார்த்தார்கள் உடைத்தார்கள்.

தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்தே செய்வது. வீட்டில் குடிக்கத் தண்ணீர் எடுத்து வரும் போது கிளாஸ் கீழே தவறி விழுந்து விட்டால் அது தவறு. அது தெரியாமல் செய்த தவறு. ஆனால் ஒரு பெரிய கடப்பாறையைத் தூக்கி வந்து சாமி மேடையை அடித்து உடைத்து நொறுக்கிப் போடுவதைத் தவறு என்று சொல்ல முடியுமா.
உடைத்த பிறகு ’தெரியாமல் உடைச்சிட்டேன்… மன்னிச்சிடுங்க… மீண்டும் ஒட்டி வச்சு தர்றேன்’ என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா. என்னங்க இது. நாலு வயசு பிள்ளை விளையாடுகிற பிலாஸ்டிக் பொம்மையா?

இது தான் கடாரம் என்கிற கெடாவில் 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும் நடந்தது. 2013 டிசம்பர் 02-ஆம் தேதி. கெடா, பூஜாங் சமவெளியில் சுங்கை பத்து புராதனத் தளம் ரகசியமாக உடைக்கப்பட்டது.

இந்தத் தளத்திற்கு 11-ஆவது தளம் என்று பெயர். (Candi Sungai Batu in Lembah Bujang, Kedah). யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பாரம்பரியத் தளம். அதுவே பூஜாங் வெளியில் உடைக்கப்பட்ட 1200 ஆண்டுகள் பழைமையான உலகப் பாரம்பரியத் தளம் ஆகும்.

A 1,200-year-old Candi called Candi Sungai Batu in Lembah Bujang, Kedah was destroyed by a developer on 02 Dec 2013. The Kedah state government, NGOs and netizens are angered over the demolition of the candi that is known as site number 11.

கெடாவில் புக்கிட் சோராஸ் எனும் சமவெளி. அங்கே தொடங்கி மத்திய செபராங் பிறை; செரோக் தோக் குன் வரை பூஜாங் வெளி பரந்து விரிந்து போகிறது. அந்தப் பக்கம் பார்த்தால் குனோங் ஜெராய் மலை அடிவாரம். இந்தப் பக்கம் பார்த்தால் புக்கிட் மெர்தாஜாம். பரப்பளவு ஏறக்குறைய 224 சதுர கிலோ மீட்டர்கள். அவ்வளவு பெரிய இடம்.

கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் இருப்பது மெர்போக் சிறுநகரம். அதன் அருகாமையில் பூஜாங் சமவெளி.

அந்தத் தளம் இருந்த பகுதியைக் கெடா மாநில அரசாங்கம் ஒரு நில மேம்பாட்டாளரிடம் விற்று விட்டது. அவரும் இரகசியமாக உடைத்து விட்டார். 2013-ஆம் ஆண்டு முக்ரீஸ் மகாதீர் கெடா முதல்வராக இருந்த போது நடந்த துர்நிகழ்ச்சி.

மலேசியா முழுமைக்கும் எதிர்ப்பு அலைகள். உலக வரலாற்று அமைப்புகளின் ஆவேசங்கள். உடைப்பதை நிறுத்தி விட்டார்கள். புதிதாக அதே மாதிரி ஒரு தளத்தைக் கட்டித் தர நில மேம்பாட்டாளர் முன் வந்தார். என்னே அறிவுஜீவிகள். ஓர் உலகப் பாரம்பரியச் சின்னத்தை உடைத்துவிட்டு அதே மாதிரி அதே இடத்தில் கட்டித் தருகிறார்களாம். சிரிப்பதா அழுவதா. தெரியவில்லை.

அப்பா அம்மாவைச் சாகடித்து விட்டு மறுபடியும் புதிதாக அதே மாதிரி அப்பா அம்மாவை உருவாக்கித் தருகிறார்களாம். என்னத்தைச் சொல்ல? எங்கேயாவது போய் இடித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் பக்கத்தில் ஒரு பெரிய சுவர் இல்லை. சரி.

பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வு வட்டத்தின் தலைவர் டத்தோ வி. நடராஜா. இவரைப் பலருக்கும் தெரியும். மலாயா வரலாற்று ஆசிரியர். நல்ல ஒரு வரலாற்று வழிகாட்டி. ’சோழன் வென்ற கடாரம்’ எனும் நூலின் ஆசிரியர்.

விசயத்தைக் கேள்விப்பட்டு அவரும் அங்கு போய் இருக்கிறார். அந்தத் தளம் தரை மட்டமாக்கப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தது. உடனே டத்தோ நடராஜன் போலீஸில் ஒரு புகார் செய்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி அந்த இடத்தைப் பார்வையிட்டார். ஒரு தளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் பொட்டல் காடாக வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. தலையில் அடித்துக் கொண்டார்.

இடிபாட்டு நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது. மலேசிய மக்கள் அதிர்ந்து போனார்கள். மலேசியர்கள்; உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொந்தளித்துப் போனார்கள்.

இது போன்ற அரிய வரலாற்றுக் கலசங்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மேலும் இது போன்ற வரலாற்று தளங்கள் உடைக்கப்படுவது தொடரும் என்று நடராஜன் எச்சரித்தார்.

மீண்டும் சொல்கிறேன். உடைக்கப்பட்டது பூஜாங் பாரம்பரியத் தளம். அந்தத் தளத்தின் எண் 11. இந்தத் தளத்தைப் போல அங்கே அப்போது அந்த இடத்தில் மட்டும் 13 தளங்கள் இருந்து உள்ளன. எல்லாமே இந்து சமயத் தாக்கங்களைக் கொண்ட தளங்கள்.

அவற்றில் ஒன்றுதான் எண் 11 கொண்ட தளம். அது புனரமைக்கப்பட்ட ஒரு கோயில் தளம். ஏற்கனவே அது இடிந்த நிலையில் இருந்தது. 2000 ஆண்டு இடைவெளியில் என்றால் சாதாரண விசயமா? அந்தத் தளத்தின் அகலம் 150 அடி; நீளம் 250 அடி. சுங்கை பத்து பகுதியில் அமைந்து இருந்தது. ஒரு செருகல்.

இந்தத் தளத்தைப் போல ஒட்டு மொத்த பூஜாங் சமவெளியிலும் நூற்றுக் கணக்கான தளங்கள் உள்ளன. 224 கி.மீ. பரப்பளவில் படர்ந்து கிடக்கின்றன.

1936 – 1937-ஆம் ஆண்டுகளில் எச்.ஜி குவாரிச் வேல்ஸ் (HG Quaritch Wales) என்பவரும் அவருடைய மனைவி டோரதி வேல்ஸ் (Dorothy Wales) என்பவரும் அந்தத் தளத்தை அகழ்வாராய்ச்சி மூலமாகக் கண்டுபிடித்தர்கள். பின்னர் தோண்டி எடுக்கும் பணிகளையும் செய்தார்கள். 1974-ஆம் ஆண்டில் மீண்டும் புனரமைப்புகள் செய்யப்பட்டன.

லெம்பா பூஜாங் என்பது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான தொல்பொருள் தளம் ஆகும். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் தாயகமாகும். கி.பி.110-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நினைவுச் சின்னம் ஆகும். அதாவது 1900 ஆண்டுகளுக்கு முந்தைய தளம். அதைப் போய் உடைத்து இருக்கிறார்கள்.

உலகப் புகழ் டைம் சஞ்சிகை. பலருக்கும் தெரியும். அந்தச் சஞ்சிகை 2000-ஆம் ஆண்டில் ஒரு கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அதன் பெயர் ’சப்போரோவில் இருந்து சுராபாயா வரையிலான சாலை’ (On the Road from Sapporo to Surabaya).

அதில் மலேசியாவைப் பற்றிய ஒரு பிரிவு. அதில் ‘பாரம்பரியம் மறுக்கப் பட்டது’ என்ற தலைப்பில் கடாரத்தைப் பற்றிய கட்டுரை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்டது. ‘கடாரத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று அந்த சஞ்சிகை ஒரு வேண்டுகோளை முன்வைத்தது.

ஆனால் என்ன நடந்தது. இந்தியர்ப் பாரம்பரியம் சார்ந்தது எனும் ஒரே குறுகிய மனப்பான்மைதான் மேலோங்கியது. இருப்பதை எப்படியாவது இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று காய்கள் நகர்த்தப் பட்டன.

என்னங்க… அது அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய இடம். உலகப் பாரம்பரிய இடம். யுனெஸ்கோ அங்கீகரித்த இடம். அது தெரியாதா. அதைப் போய் எப்படிங்க வீடு கட்டும் சீன முதலாளியிடம் விற்க வேண்டும். அந்தச் சீனரும் நல்ல நாள் பார்த்து புல்டோசர்களை வைத்து இடிக்க வேண்டும்.

நல்லவேளை. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது. ஒரே ஒரு தளம் தான் தரைமட்டமாக்கப் பட்டது. அதற்குள் செய்தி வெளியாகி உலக வரலாற்று ஆசிரியர்கள் பலரும் கொப்பளித்து விட்டார்கள். உடைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது முக்ரீஸ் மகாதீர் மாநில முதல்வராக இருந்தார்.

பத்திரிகைக்காரர்கள் சும்மா இருப்பார்களா. பிடித்துப் பேன் பார்த்து விட்டார்கள். அத்தைக்கு மீசை வைத்த கதையைச் சொல்லி முதல்வர் நழுவிக் கொண்டார்.

கலைக் கோயில் இருந்த இடத்தைத் தான் நில மேம்பாட்டுக்காகக் கொடுத்தோம். அவர் கலைக் கோயிலை உடைப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் இனிமேல் அங்கே எந்த மேம்பாட்டு வேலைகள் எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டோம். நில மேம்பாட்டாளரும் அதே இடத்தில் புதிய கோயிலைக் கட்டித் தருவதாகவும் சொல்லி விட்டார் என்று சமாதானம் சொன்னார்.

என்னங்க இது. கிண்டர்கார்டன் பிள்ளைகள் பஞ்சு மிட்டாய் வாங்கி ஊதி வெடிக்கிற கதை மாதிரி இருக்கிறது. கீழே விழுந்த ஊசி தெரியவில்லை என்றால் நியாயம். ஆனால் வீட்டு வாசலில் நிற்கிற எருமை மாடு தெரியவில்லை என்றால் என்னங்க நியாயம்.

என்னைக் கேட்டால் பகலில் பசு மாடு தெரியாதவர்களுக்கு இரவில் எருமை மாடு தெரியாது என்று தான் சொல்வேன்.

அந்தப் பூஜாங் சமவெளி சுங்கை பத்து புராதனக் கலைக் கோயிலை எவ்வளவு கஷ்டப்பட்டுக் கட்டி இருப்பார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கலைத் தளம். அந்தக் காலத்தில் சிமெண்டு, பிலாஸ்டர், பிசின், செங்கல் எதுவும் இல்லை. சுமைதூக்கி, சுமைதாங்கி, ஓங்கி தாங்கி, கிரேன் புல்டோசர் என்று எதுவுமே இல்லாத காலம்.

இருந்தாலும் பத்து இருபது மைல் தூரத்தில் இருந்து சுண்ணாம்பு மலை அடிவாரத்தில் இருந்து கல்பாறைகளை வெட்டி எடுத்து வந்து கட்டி இருக்கிறார்கள். அவற்றை ரொம்ப சுலபமாக ஒரே நாளில் இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள். கொஞ்சஞ்சம்கூட மனிதத் தன்மை இல்லாதவர்கள். எப்படிங்க மனசு வருது.

இந்தக் கட்டத்தில் கம்போடியாவில் இருக்கும் அங்கோர் வாட்; தாய்லாந்தில் இருக்கும் ஸ்ரீ சந்தனா மலை; பிரம்பனான் சிவன் கோயில்; போரோபுதூர் ஆலயம் ஆகியவை என் நினைவுக்கு வருகின்றன. இவற்றுக்கு எல்லாம் முந்தியது பூஜாங் பள்ளத்தாக்கில் உடைக்கப்பட்ட 11-எண் கொண்ட கலைக் கோயில் ஆகும்.

பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றி 1970 – 1980 களின் வரலாற்றுப் பாட நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது மலாக்கா வரலாறுக்கும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தியது. ஆனாலும் 1400-ஆம் ஆண்டில் மலாக்காவைப் பரமேஸ்வரா நிறுவிய காலத்தில் இருந்துதான் மலாயாவின் வரலாற்றை அங்கீகரித்து வருகிறார்கள். அதனால் பூஜாங் வரலாறு அடிபட்டுப் போகிறது.

ஒன்று சொல்வேன். இனவாதம் மதவாதம் இரண்டும் வன்முறைத் தீவிரவாதங்கள். மனித இனத்திற்குள் வரம்பு மீறும் உச்சவாதங்கள். மலைநாட்டு அரசியலுக்குள் பக்கவாதங்கள். அவையே மலேசியர் ஒற்றுமைக்கு பகைவாதங்கள்.

என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; எப்படித்தான் வரலாற்றுப் படிமங்களை மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் காலா காலத்திற்கும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்த மலாயாத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் சில பல நூறாண்டுகளுக்கு முன்னரே தடம் பதித்து விட்டார்கள். இது எவராலும் மறுக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மை.

அந்த உண்மைகள் காலா காலத்திற்கும் நிரந்தரமாகிப் போன உண்மைகள். அவையே வரலாறு சொல்லும் சத்தியமான உண்மைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here