ஓர் இந்தியக் குடும்பத்தின் ’ஐந்தடி வாழ்க்கை

0

குடியிருந்த வீட்டிற்கான வாடகையைச் செலுத்த முடியாமல், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு ஐந்தடியில் வாழ்ந்து வந்த இந்தியக் குடும்பத்தின் துயரக் கதை அம்பலத்திற்கு வந்துள்ளது.
இங்குள்ள அல்மா தாமான் இம்பியான் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் நிகழ்ந்துள்ள இத்துயரத்தில் 62 வயது அன்னம்மாள் மைக்கல் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தமது 18 வயது முதல் 11 வயதிலான 5 பேரப்பிள்ளைகள் 5 மாத கொள்ளுப்பேரப்பிள்ளையுடன் அவர் அங்கு வாழ்ந்து வருகிறார்.
இவரது 18 வயது பேத்தி திலகவதி முனியாண்டி பகுதி நேரமாக ஓர் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். மற்றப் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் எந்தவோர் அடையாள ஆவணங்களும் இல்லாததால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
மூதாட்டி அன்னம்மாளின் ஒரு மகனும் மருமகளும் சிறையில் இருப்பதாகவும் மற்றப் பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய மாவட்ட சமூகநல இலாகாவின் முதியோர் பிரிவைச் சேர்ந்த குமார் தெரிவித்தார்.
புகாரைப் பெற்று சம்பந்தப்பட்டப் பகுதிக்குச் சென்ற சமூகநல இலாகாவின் அதிகாரிகள் அக்குடும்பம் தங்குவதற்கு அதே குடியிருப்பில் தற்காலிக வீடொன்றை வழங்கியிருப்பதோடு மாநில அரசாங்கத்தின் பிபிஆர் வீட்டை கொடுப்பதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் பேத்தி திலகவதியின் பெயரில் அக்குடும்பத்திற்கு உடனடியாக மாதம் 300 வெள்ளி சமூகநல உதவியும் வழங்கப்பட்டது.
மாச்சாங் புபோ தொகுதி சட்டமன்ற சேவை மையத்தின் ஒத்துழைப்போடு மத்திய மாவட்ட குடியிருப்பு இலாகாவின் இயக்குனர் புவான் ஜைனோல் உதவியுடன் இங்குள்ள டேசா வவாசான் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்று அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுமென குமார் தெரிவித்தார்.
ஒரு சுதந்திர நாட்டில் இந்திய சமுதாயம் இன்னும் இப்படியொரு ஐந்தடி வாழ்க்கையை வாழ்ந்து வருவது மிகுந்த வேதனையாக உள்ளதென குறிப்பிட்ட செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினரும் மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவருமான டேவிட் மார்ஷெல் இக்குடும்பத்தின் துயருக்கு உடனடியாக தற்காலிக தீர்வை கண்டுள்ள மாவட்ட சமூகநல இலாகா மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − seven =