ஓம்ஸ் சிந்தனை மடல் வாக்குரிமையின் சக்தி மிகப் பெரியது

வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பது, தமிழ்நாட்டில் பராந்தக சோழன் காலத்திலேயே குடவோலை முறை மூலம் தொடங்கிவிட்டது. அப்படியென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் விழிப்புணர்வு என்பதெல்லாம் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகால பழைய விஷயம்தான். ஒவ்வொரு கால கட்டத்திலும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும், விதிமுறைகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. எக்காலத்திற்கும் ஏற்ற மாதிரி, ஒரே மாதிரியான தேர்தல் நடைமுறை இருந்ததில்லை. தொடக்கக் காலத்தில், சொத்து வைத்திருப்பவர்கள், வரிகட்டுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறை இருந்திருக்கிறது. மக்களாட்சியில் வாக்குரிமையின் சக்தியானது மிகப் பெரிதாகும். மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சியே மக்களாட்சி. இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சாதாரண பிரஜைக்கும் உரிமையுண்டு. தேர்தல் நாளிலே ஒருவன் தனக்கு விருப்பமான வேட்பாளரை ஆட்சியில் பங்கு கொள்ளும் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக் கின்றான். இவனைப் போலவே பலரும் அந்த வேட்பாளரைத் தேர்ந் தெடுத்திருந்தால் அவர் அந்த தேர்தலில் வெற்றிப் பெற்று மக்களால் ஆன ஆட்சியில் பங்குப் பெற்றிருப்பார். நாட்டினை ஆளும் அதிகாரத்தை பொருத்தமானவர்களுக்கு வழங்க மக்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த உரிமை இதுவாகும். இது யாருடைய அழுத்தங்களோ அதிகாரங்களோ அனைத்திற்கும் அப்பாற்பட்ட தனிமனித அதிகாரம் என்று கூறலாம். “ நான் சுயமாக உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன் ! அரசின் உதவி எனக்கு என்றுமே தேவையில்லை ! அப்படி இருக்கையில் நான் ஏன் வாக்களிக்கவேண்டும்“. என்று இருந்திடாமல் அல்லது அவ்வாறு எண்ணும் நண்பர்கள் உங்களைச் சுற்றியிருப்பார்கள் என்றால் அவர்களிடம் வாக்களிப்பதற்கான அவசியத்தைக் கூறி வாக்களிக்கச் செய்யுங்கள். ஏனென்றால், நாம் உபயோகப்படுத்தும் ஒரு சிறிய பொருளிலிருந்து ஒரு நாடு செயற்கை கோள்கள் அனுப்பும் திட்டம் முதல் அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாததாகும். ஆகவே, திறமையான ஓர் அரசாங்கம் அமைவதற்கு நாம் வாக்களிப்பது அவசியம் . யாருக்கு வாக்களித்து என்ன பயன்? எல்லா கட்சிகளுமே மோசமானதுதான் என புலம்பாமல், உள்ள கட்சிகளில் சிறந்த கட்சி எது, வேட்பாளர்களில் சிறந்தவர் யார் என்று கணித்து இருப்பவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள். வாக்களிப்பதற்கு மனசாட்சியை ஆதாரமாகக் கொள்ளுங்கள். இதில் நமது அரிமா நண்பர்களின் பணி மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. காரணம் மேலே சொல்லியிருப்பது போன்று சிறு சிறு சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு நம்மில் சிலர் வாக்களிக்கச் செல்லாமல் இருக்கலாம். “நிறைய பேர் ஓட்டுப் போடுகிறார்களே. நான் ஒருவன் ஓட்டுப் போடாவிட்டால் நான் விரும்பிய வேட்பாளர் ஒன்றும் தோல்வி அடையமாட்டார்” என்று விளக்கங்கள் கூறுவோரும் உண்டு. ஆனால், நம்முடைய ஒரு ஓட்டு கூட வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்காக அமையும். ஆகவே, எதிலும் அலட்சியம் செய்யாமல் நமது வாக்கினை நாம் விரும்பும் கட்சியைச் சேர்ந்த வாக்காளருக்கு செலுத்திட சிரமம் பாராமல் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டும். இதனை அரிமா நண்பர்கள் உறுதி செய்ய வேண்டும். நம்முடைய இந்திய வாக்காளர்கள் முழு பங்களிப்பில் வாக்குகள் செலுத்த அரிமா நண்பர்கள் உதவிட வேண்டும். வாக்காளர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கான போக்குவரவு வசதி செய்து கொடுத்தல், வாக்காளர் சரியான திறமையான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் வேட்பாளரைப் பற்றி எடுத்துச் சொல்லுதல் போன்ற பணிகளில் அரிமா நண்பர்கள் ஈடுபட வேண்டும். அதிலும் வரும் 20 ஆம் திகதி நடைபெற இருக்கும் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு மிகவும் தீவிரமாக மேற்சொன்ன பணிகளில் அரிமா நண்பர்கள் ஈடுபட வேண்டும். நமது இந்திய சமுதாயத்தின் தேவைகள் அதிகமாக உள்ளன. இந்த தேவைகள் ஏறக்குறைய 60 ஆண்டு காலம் கண்டுக் கொள்ளப்படாமல் விடுபட்டுவிட்டது என்றே கூற வேண்டும். நாம் நமது தேவைகளை எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தரும் அரசினை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினை அமைக்க தேர்தல் நடக்கவிருக்கின்றது. இதில் நமது இந்திய சமுதாயத்தின் நன்மைகளை நினைத்துப் பார்க்கும் கட்சியாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி விளங்குகிறது. எனவே, இந்திய சமுதாயம் இந்த நம்பிக்கைக் கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி வெற்றிப் பெறச் செய்வது அவசியமாகும். அதே வேளையில், காடேக் மற்றும் ரிம் தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைப் பிரதிநிதித்து இரண்டு இந்திய வேட்பாளார்காளாக காடேக்கில் சாமிநாதனும் ரிம்மில் பிரசாந்த் குமாரும் தேர்தலில் களம் காண்கிறார்கள். சாமிநாதன் தனது சட்டமன்ற உறுப்பினர் காலத்தில் மலாக்கா வாழ் இந்தியர்களுக்கு பல நன்மைகள் புரிந்துள்ளார். மேலும் மலாக்கா இந்திய சமுதாயம் நீத்தார் கடன் முறைகளைச் செய்வதற்கு தெலுக் கோங் என்ற இடத்தில் 1.85 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு அரசின் அங்கீகாரம் பெற்றார். ஆனால் பின்னர் வந்த அரசு அதனை கெசட் பண்ணாமல் கிடப்பில் போட்டது. சாமிநாதன் வெற்றி பெற்றால் மீண்டும் இந்தத் திட்டத்தை முறையாக நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது திண்ணம். தொடர்ந்து பிரசாந்த் குமார் முந்தைய மலாக்கா முதல்வர் அட்லியின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது அவரிடம் உதவி பெற்றோர் பலர் ஆவர். தங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுடன் பிரசாந்த் குமாரை அணுகிய இந்திய சமுதாயத்தினருக்கு தக்க வழிமுறைகள் சொல்லி அவர்களுடைய பிரச்சினைகளைக் களைவதில் வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்றால் நிச்சயமாக இன்னும் பல்வேறு உதவிகளைத் தக்க நேரத்தில் வழங்குவார் என்பது உறுதியாகும். இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏறக்குறைய தலா 2,000 இந்திய சமூக வாக்காளர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த இரண்டு தொகுதியிலும் இருக்கும் இந்திய சமுதாய வாக்காளர்களின் வாக்குகள் சாமிநாதனுக்கும் பிரசாந் குமாருக்கும் கிடைப்பதற்கு அரிமா நண்பர்கள் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக உழைத்திட வேண்டும். மக்களாட்சியில் வாக்குரிமை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 13 =