ஓம்ஸ் சிந்தனை மடல் கிட்டாதாயின் வெட்டென மற

ஒளவையார் பாடிய இலக்கியங்களில் ஒன்றுதான் கொன்றை வேந்தனாகும். ஆத்திச் சூடியிலும் மூதுரையிலும் கொன்றை வேந்தனிலும் ஒளவையார் வாழ்க்கையின் தத்துவங்களை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி கூறி இருக்கின்றார். ஒளவையார் வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்து ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவகையில் நீதி மொழிகளை வழங்கியிருக்கின்றார். ஒளவையார் நேரடியாக சில வாழ்க்கைத் தத்துவங்களை கூறியிருக்கின்றார். இன்றைய ஆசைகள் நாளைக்கு ஒன்றும் இல்லாமல் போகலாம். நாளை நாம் கொள்ளப் போகும் ஆசை இன்று நம் விருப்பத்திலேயே இல்லாமலும் இருக்கலாம். மனிதன் பிறந்த நாள்முதல் இறக்கும் நாள் வரை பல்வேறு ஆசைகளைக் கொண்டிருப்பது உண்மையாகும்.. நம்மிடம் நம் உள் மனம் சொல்லும் ரகசிய ஆசைகள்தான் நம் கனவுகளாக அமைகின்றன. சில நேரங்களில் கனவுகள் கூட பயங்கரமானதாக இருக்கும். ஒரு சிங்கம் நம்மைத் துரத்த நாம் எதுவும் செய்யமுடியாமல் செயலற்று நிற்பதுபோல் கொடிய கனவு வருகிறது என்று சொன்னால், கனவுகளுக்கு பலன் சொல்பவர்கள் இந்தக் கனவினைப் பற்றி கூறும்போது, அது வேறொன்றுமில்லை. நம் ஆசைகள் நிறைவேறாதோ என்ற நம் உள் மனதின் பயம்தான் அது என்று கூறுகிறார்கள். ஆடை இல்லாதவன் அரைமனிதன் என்பார்கள். ஆசையே இல்லாதவனை மனிதனே இல்லை என்று சொல்லலாம். ஆசைகள் ஒருவனின் ரசனைகள் என்று சொல்லப்படுகின்றது.. ரசனைகள் இல்லாவிட்டால் ஒரு மனிதன் எதையுமே ரசிக்க முடியாது. எதையுமே ரசிக்காதவனை ஒரு ஜடம் என்றே கூறுவர். இம்மாதிரியான மனிதனுக்கு வாழ்க்கையே இல்லை என்றுதான் அர்த்தமாகின்றது. வாழ்வதற்காகத்தான் நாம் மண்ணில் பிறந்திருக்கிறோம். பின் ஆசையை ஒழி என்று கூறும் பொழுது பேராசைப் படாதே என்றுதான் அதற்குப் பொருள். அதே வேளை ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்று உறுதியாக தெரியும் பொழுது அந்த ஆசையை உடனடியாக விட்டு விட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது மிக உயர்ந்த நெறியைப் போதிக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்தால், வாழ்க்கை நமக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வசந்தமாக மாறிவிடும். நாம் ஒரு விஷயத்தை அடைய நினைக்கிறோம், முயற்சிகள் செய்கிறோம், நடக்கவில்லை, அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அந்த பொருளை அடையும் நிலையை நாம் இன்னும் எட்டவில்லை, அல்லது இன்னும் பக்குவம் அடையவில்லை என்ற நிலையும் இருக்கலாம். ஆயினும் அதன் மேல் தொடர்ந்து நாட்டம் கொள்வது, சரிதானா என்று சிந்திக்க வேண்டும். நமக்கு இந்தப் பொருள் கிடைக்கவில்லை, சரி போகட்டும், என்று விலகிவிட்டால், ”சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்”, என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ளும் நிலையில் செயல்பட்டால் அது நமது தோல்வியை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்து விட்டோம் என்ற நிலையைக் காட்டுவதாக அமையும். பல முயற்சிகள் செய்தும் நினைத்தது, நடக்கவில்லை எனும்போது, சரி போகட்டும், என்று விலகிவிட்டால், வாழ்க்கை ஒரே நிமிடத்தில், எத்தனை அழகாக மாறும் என்று கூறுவோரும் உண்டு. ஆனால், ஒளவையார் இங்கு வாழ்க்கைத் ததுவத்தில் உள்ள ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறுகிறார். எல்லோரும் முயற்சியை கைவிடாதே. ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது “கிட்டாதாயின் வெட்டென மற” என்று அறிவுறுத்துகிறார். அதாவது ஒரு காரியத்தில் வெற்றி கிடைக்காது என்று தெளிவாக தெரிந்து கொண்டு விட்டால், அந்தக் காரியத்தின் வெற்றிக்காக மேலும் மேலும் முயற்சி செய்து நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்காமல் புதிய காரியத்தில் வெற்றி பெற முழுக்கவனம் செலுத்தும் பொருட்டு அதை மறந்துவிட்டு புதிய முயற்சியில் ஈடுபட சொல்லுகிறார் ஒளவையார். எனவேதான் அரிமா தோழர்கள் இந்தக் கொன்றை வேந்தன் பொன்மொழியைக் கருத்தில் கொண்டு வெற்றி கிடைக்காது என்று தெரிந்து விட்ட போதிலும் அதிலேயே நேரத்தை செலவு பண்ணாமல் புதிய காரியத்தில் இறங்கி வெற்றிக் காண முயல வேண்டும். “இலவு காத்த கிளி” என்ற பழமொழி உண்டு. அதன் பொருள் என்று பார்ப்போமானால், ஒரு கிளி காட்டில் நன்கு வளர்ந்த இலவ மரத்தில் காய்கள் தொங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தது. “ஆகா! எவ்வளவு காய்கள் இந்த மரத்தில் இருக்கின்றன. இவை பழுத்தால் நமக்கு பல மாதங்களுக்கு உணவாகும்” என்று எண்ணியது அந்த கிளி. எனவே, அந்த இலவ மரத்திலேயே கிளி தங்கியது. இலவங்காய்கள் எப்போது பழுக்கும், எப்போது நமக்கு வயிறு நிறையும் என்ற ஏக்கத்துடன் கிளி காத்திருந்தது. ஆனால் காலந்தான் கடந்தது. இலவ மரத்தின் காய்கள் பழுக்கவில்லை. மாறாக இலவ மரத்தின் காய்கள் காய்ந்து உடைந்து பஞ்சாக பறந்தது. இதைப் பார்த்த அக்கிளி ஏக்கத்துடன் உயிரை விட்டது. இந்தக் பழமொழியின் விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் முக்கிய செய்தியானது, வெற்றி என்பது வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததற்குப் பிறகு அதற்காகக் காத்துக் கிடப்பது நாம் நேரத்தை வீணடிக்கின்றோம் என்பதையே காட்டுகின்றது. எனவேதான் அரிமா இயக்கத் தோழர்கள் தங்களுடைய திட்டங்களை மிகச் சரியாக திட்டமிட வேண்டும். நிச்சயமாக வெற்றியின் கோட்டை தொட முடியும் என்று தெரிந்தால்தான் ஒரு திட்டத்தில் இறங்கி அதன் வெற்றிக்கு உழைக்க வேண்டும். மாறாக எடுத்த திட்டத்தில் ஆக்கப்பூர்வமான விளைவுகள் எதுவும் கிடையாது என்று அறியும் போது ஒளவையார் சொன்னது போல அந்த திட்டத்தை மறந்துவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் காலமும் உழைப்பும் வீணாகாது. எனவே அரிமாவின் தோழர்கள் இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சியைக் காண விழையும் போது காலத்தையும் உழைப்பையும் முறையாக செலவிடும்போது வெற்றி மாலைகளை சூடுவர் என்பது திண்ணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eleven =