ஓம்ஸ் சிந்தனை மடல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கூறுகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதாகும். இந்த மூன்று கூறுகளைப் பற்றி திருவள்ளுவர் உணர்த்துவதை பின்வரும் குறள் வழி அறிய முடிகிறது. வையகத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் இக்குறளில் வள்ளுவர் எந்த ஒன்றை செய்தாலும் அதற்கு இம்மை மற்றும் மறுமை பயன்கள் இருக்க வேண்டும் என்று விளக்கம் கொடுக்கின்றார். ஏதோ இந்த பூமியில் வாழும் வாழ்வில் கொஞ்சம் பயன் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர் இல்லை வள்ளுவர். மாறாக, மறுமைக்கும் பலன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஆவார். இல்லற தர்மத்தில் இருந்து வாழும் ஒருவன், இந்த வாழ்க்கை முடிந்த பின் கட்டாயம் மேலுலகம் சென்று அங்குள்ள தேவர்கள், தெய்வங்களோடு இருப்பான் என்பது திண்ணம் என்பதை திருவள்ளுவர் உணர்த்துகிறார். எனவே, மறுமையில் அவன் “வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்“ என்று தெய்வங்களுடன் இருக்கும் பாக்கியம் பெறுகின்றான் என்று வள்ளுவர் கூறுகிறார். இந்த குறளுக்கு இந்த பூவுலகத்தில் சிறப்பாக வாழ வகுத்த விதி முறைகள் தான் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு என்பதாகும் என்று பேரறிஞர் அண்ணா கருத்துரைக்கின்றார். கடமையென்றால் நாம் சமூகத்திற்கும், வீட்டிற்கும் ஆற்ற வேண்டிய தொண்டு. கண்ணியமென்றால் சமூகத்திலும், வீட்டிலும் நமக்கு கிடைக்கும் அந்தஸ்து அதாவது மதிப்பு. கட்டுபாடு என்றால் நாம் ஒழுக்கத்திற்கு கட்டுப்படுவது. இவை மூன்றையும் வாழ்வில் கடைப் பிடித்தாலே போதும். நாம் நம்முடைய வாழ்வின் உச்ச கட்டமான சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்பது தமிழரது நம்பிக்கையாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.. மனிதன், தான் என்ற தனது வட்டத்தை விட்டு, குடும்பம் என்ற பெரிய வட்டத்துக்குள் முதலில் வருகிறான். பின்னர், சமுதாயம் என்ற இன்னும் பெரிய வட்டத்துக்குள் நுழைகிறான். அதன்பின்னால், ஒட்டு மொத்தமாக தன்னைச் சுற்றியுள்ள மனித சமுதாயத்தை நேசிக்கத் தொடங்குகிறான். தொடர்ந்து மனிதன் தனது வாழ்க்கையின் இறுதிப் பயணமாக அங்கிருந்து வானுலகம், வீடு பேறு அடைகிறான் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது. இந்த தத்துவங்களிலிருந்து விடுபட்டு இதில் சொல்லப்படும் மூன்று வார்த்தைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு பொருள் பார்ப்போமானால் அவை பின்வரும் வகையில் வெளிப்படுகின்றது, கடமை என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றிற்கும் இடையே இணைப்பாக இருக்கும் செயலாகும். கடமை என்பதை பொறுப்பு என்றும் சொல்லலாம். இது முற்றிலும் எழுதப்பட்ட விதி இல்லை என்றாலும், நமது அறிவிற்கேற்ப சரி என்பது என்ன என்பதுப் பற்றிய அனுமான மாகும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைப் பயணத்தில் அவன் மேற்கொள்ளும் பொறுப்புகளே கடமை என்றும் பொருள் உணர்த்துகின்றது. கண்ணியம் என்பது கடமையை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். கண்ணியம் என்பது கடமையைச் செய்யும் பொழுது நாம் கைக்கொள்ள வேண்டியதே கண்ணியம். இந்த கண்ணியம் என்பது ஒரு காரியத்தில் நம்முடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவரையும் கருத்தில் கொண்டே காத்து நடந்து கொள்வதாகும். கண்ணியம் ஒவ்வொருவரும் கொண்டுள்ள மானம் போன்றதாகும். கண்ணியத்தைக் எப்பொழுதும் காத்துக் கொள்ளுதல் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகும். கட்டுப்பாடு என்பது அளவறிந்து செயல்படுதல் ஆகும். எதையும் அளவிற்கு மீறிச் செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இது பொது உண்மை. கட்டுப்பாடு என்பது பிறர் மீது ஆதிக்கம் செய்வது அல்லது பிறருக்கு அடங்கி நடப்பது அல்ல. கட்டுப்பாடு என்பது அளவறிந்து நமது செயல்களையும் பேச்சுக்களையும் கட்டுக்குள் வைப்பதே ஆகும். எனவே, நமது அரிமா இயக்கம் சிறந்ததொரு இயக்கமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அரிமா நண்பர்கள் யாவரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை தங்களுடைய எண்ணங்களில் பதித்திருக்க வேண்டும். அரிமாவின் நோக்கமான மறுமலர்ச்சி சமுதாயம் காண வேண்டும் என்பதினை ஒவ்வொருவரும் தங்களுடைய கடமையாகக் கொள்ள வேண்டும். இந்த உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றதான் அரிமா நண்பர்கள் கடமையுடன் செயலாற்ற வேண்டும். ஒரு குடும்பத்தில் பிள்ளையாக, கணவனாக, தந்தையாக கடமையை சரிவர ஆற்ற வேண்டும். அதே வேளையில் நமது இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி சமுதாயக் கடமையையும் அரிமா நண்பர்கள் சீரிய முறையில் முழு ஈடுபாட்டையும் காட்டி நிறைவேற்றுதல் அவசியமாகும். அரிமா நண்பர்கள் கடமையை செய்யும் போது கண்ணியம் காக்க வேண்டும். பிறருக்கு கொடுக்க வேண்டிய மதிப்பினையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும். மற்றவர்களை புண் படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது. சமூக ஒழுக்கம், பண்பாடு முதலானவை நமது அணிகலன்களாக இருக்க வேண்டும். கண்ணியமான பேச்சும் செயலும் நமது பண்பாக அமைகின்ற வேளையில் நம் மீது பிறர் கொள்கின்ற மதிப்பும் மரியாதையும் உயரும் என்பது திண்ணமாகும். அதே வேளையில் அரிமா நண்பர்கள் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கடமைகளின் எல்லைகளை உணர்ந்து கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். நாம் யார் என்ற உணர்வினை என்றும் மறந்து விடக் கூடாது. நம்முடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் எப்பொழுதும் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கென்று விதிக்கப்பட்டுள்ளதை என்றுமே யாராலும் கொள்ளையிட முடியாது. மாறாக அவை நமக்கான காலம் கனியும் போது கிடைத்திடும் என்பது உண்மையாகும். எனவே, பேராசை கொண்டு ஒரு கட்டுப்பாடு இல்லாத சீர்கெட்ட வாழ்க்கையை வாழவே கூடாது. இந்த தருணத்தில் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. நமது அரிமா நண்பர்கள் சாமிநாதன் போட்டியிடும் காடேக் தொகுதி மற்றும் ரிம் தொகுதியில் போட்டியிடும் பிரசாந்த் குமார் இருவரின் வெற்றிக்காக நமது இந்திய சமுதாய வாக்காளர்களைச் சந்தித்து வாக்குகள் சேகரிக்க வேண்டும். அந்த சமயம் அரிமா நண்பர்கள் யாவரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று விஷயங்களையும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அரிமா நண்பர்கள் நமது பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் வெற்றிக்காக கடமை ஆற்றும் போது தங்களுடைய பேச்சிலும் செயலிலும் கண்ணியமாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − three =