ஓம்ஸ் அறவாரியத்தின் யூபிஎஸ்ஆர் தங்கப்பதக்க விழா

கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓம்ஸ் அறவாரியத்தின் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான தங்கப் பதக்கம் வழங்கும் விழா இவ்வாண்டு கெஅடிலான் கட்சித் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் என்று செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவித்தார்.
இம்முறை 2016, 2017, 2018 ஆகிய 3 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் பயின்று எல்லாப் பாடங்களிலும் ஏ மதிப்பெண்களைப் பெற்ற 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் 5ஏ, 6ஏ, 7ஏ பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்படவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த விருது விழா இடையிலே சில ஆண்டுகள் நடைபெறாமல் தடைபட்டுப் போனது. அதற்கு பல அரசியல் காரணங்கள் இருந்தன. குறிப்பாக கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் துணை கல்வி அமைச்சர் பொறுப்பிலிருந்த கமலநாதன் இந்த விருதளிப்பு விழா நடைபெறாமல் தடைபட்டுப் போனதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கினார்.
ஆண்டுதோறும் இந்த விழாவை மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தோடு இணைந்து நடத்துவோம். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த விழா குறித்து தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தோடு இரண்டு, மூன்று கூட்டங்களை நடத்தியிருந்தோம்.
அதற்குப் பிறகு இந்த விழா நடத்துவதில் சுணக்கம் ஏற்படுவதாகத் தெரிந்தது. என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தபோது அப்போதைய துணை கல்வியமைச்சராக இருந்த கமலநாதன் அதற்கு தடையாக இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
அவர் எதற்காக இந்த மாணவர் நலனுக்கான விழாவை தடை செய்ய முனைப்பு காட்டினார் என்பது எனக்குத் தெரியாது. நான் அரசியலுக்கு வந்து அவர் இடத்தை பிடித்துவிடுவேன் என்று நினைத்து அப்படி செய்திருக்கக் கூடும் என்று ஓம்ஸ் தியாகராஜன் குறிப்பிட்டார்.
அதன் பிறகு யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான தங்கப் பதக்கம் வழங்கும் விழா அப்படியே முடங்கிக் கிடந்தது. இப்போது அந்த விழாவை நடத்துவது என்று தீர்மானித்து 2016 முதல் 2018 வரையிலான மாணவர்களுக்கு மொத்தமாக தங்கப் பதக்கம் வழங்க வேண்டும் என்ற முடிவை செய்திருக்கிறோம்.
இந்த விழாவை தலைமையாசிரியர் மன்றத்தோடு இணைந்து நடத்துவதா அல்லது தனித்து நடத்துவதா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்த தங்கப் பதக்க விருதளிப்பு விழா சில ஆண்டுகள் நடைபெறாமல் தடைபட்டுப் போனதற்காக தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + eleven =