ஓமிக்ரோன் வைரஸ் பரவல்; மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்

கோவிட்-19 ஓமிக்ரோன் வைரஸ் இதர வைரஸ்களை விட வேகமாகப் பரவக்கூடியது என்பதால் மலேசியர்கள் கவனமாக நடந்து கொள்வதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் தவறாமல் கடைப்பிடித்து வர வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று வலியுறுத்தினார். ஓமிக்ரோன் வைரஸ் எவ்வளவு வேகத்தில் தொற்றக்கூடியது என்பது தெரியவில்லை. ஆனால், உருமாறிய டெல்டா வைரஸைவிட அது வேகமாகப் பரவக்கூடும் என்று தமது டுவிட்டர் செய்தியில் கைரி குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வரவேண்டும். கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டிகளை அவர்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று அவர் சொன்னார். ஓமிக்ரோன் வைரஸ் டெல்டாவைவிட மிக வேகமாகப் பரவக்கூடியது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதன் வீரியம் எத்தகையது என்பதுதாம் இன்னும் தெரியாமல் உள்ளது என்றார். இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் தூய்மையைப் பேணுவது போன்ற பொது சுகாதார நடவடிக்கைளைப் பின்பற்றி நடப்பதுதான். வீட்டில் காற்றோட்டமான சூழலைப் பராமரித்து வருவது, வயதானவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்றவற்றையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஒமிக்ரோன் சொன்னார். தென்னாப்பிரிக்காவில் முதலில் திரிபடைந்த கோவிட்-19 வைரஸான ஒமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டது.அது குறித்துகடந்த நவம்பர் 24ஆம் தேதியன்று உலகச் சுகாதார நிறுவனத்திடம் அது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆப்பிரிக்காவுக்கு வெளியே பெல்ஜியம், ஹாங்காங், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் அந்த வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போட்ஸ்வானா, எஸ்வாதினி, லெசோத்தோ, மொஸாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அண்மைய நாட்களில் வருகை புரிந்த பயணிகள் எவரும் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கடந்த மாதம் 26ஆம் தேதியன்று கைரி அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =