ஒஸ்மான் சாப்பியான் வெளியேற்றப்பட்டால் ஜொகூரில் அரசியல் நெருக்கடி!

ஜொகூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாப்பியான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால், ஜொகூர் மாநில அரசியலில் புதிய நெருக்கடி ஏற்படலாம் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கோடி காட்டினார்.
ஜொகூர் மாநிலத்தில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்படுமானால், சட்டமன்றத்தைக் கலைத்து விடுவேன் என கடந்த ஜூன் 3ஆம் தேதி ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் எச்சரித்திருந்தார்.
அந்த வகையில், ஜொகூர் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரான ஒஸ்மான் சாப்பியான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால், அம்மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு மாநில சட்டமன்றமும் நாடாளுமன்றமும் கலைக்கப்படலாம் என நஜிப் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
சபா உட்பட பல மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன. ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கைப்பற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் பிடிவாதமாக இருந்தால், ஜொகூர் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
புதிய தேர்தல் நடத்தப்படுமானால், பக்காத்தான் ஹரப்பான் படுதோல்வி அடையும் என்று நஜிப் எச்சரித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியோடு இணைந்து பணியாற்றுவதில் துன் மகாதீர் அணியும் வாரிசான் கட்சியும் அடம்பிடிக்கின்றன.
சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் மகாதீர் கட்சியைச் சேர்ந்த அமிர் குஸைரி, மரச் சின்னத்தில் போட்டியிட்டார்.
அங்கு பெஜுவாங் படுதோல்வி கண்டது. ஆகவே அந்த மரச் சின்னத்துடன் போட்டியிட நாங்கள் ஆர்வமாக இல்லை என்று நஜிப் சுட்டிக்காட்டினார்.
சிலிம் இடைத்தேர்தலின் போது ஒஸ்மான் சாப்பியான் மகாதீர் அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பெர்சத்து கட்சியைச் சேர்ந்த இவர் பெர்சத்துவில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + ten =