ஒற்றுமையாக இருந்தால் இந்திய சமுதாயம் சாதிக்க முடியும்!

இந்நாட்டில் இந்திய சமுதாயம் பல நன்மைகளைப் பெற வேண்டுமானால் அதற்கு அஸ்திவாரம் ஒற்றுமையே என மலேசிய சமூக நல மறுமலர்ச்சி இயக்கத்தின் தேசியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிலைபெற முக்கிய காரணமாக இளைஞர் படை ஒன்றிணைந்து போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டனர். அவர்களது ஒற்றுமைப் போராட்டத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கி இன்று ஜல்லிக்கட்டை நிலைபெறச் செய்தது. நம் மலேசியத் திருநாட்டில் ஹிண்ட்ராப் பேரணியை மறக்க இயலாது. அவர்கள் நடத்திய போராட்டத்தில் அரசியல் கட்சி, பொது அமைப்புகள், இளைஞர் படை என யாவரும் மனமுவந்து ஹிண்ட்ராப் பேரணியில் கலந்து கொண்டது நமது ஒற்றுமையை பறை சாற்றியது. அங்கே எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குரலாக சமுதாயத் தேவைக்கு குரல் கொடுத்ததை அனைவரும் அறிவர். இதனால் ஏற்பட்ட நன்மை என்ன? அரசாங்கத்தில் பல இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பினாங்கு மாநில வரலாற்றில் முதல் முறையாக துணை முதல் வராக இந்தியர் நியமிக்கப்பட்டார். பேராக் மாநிலத்தில் இந்திய சபாநாயகர் தலைமையேற்க வழிவகுத்தது, நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட பல இந்தியர்கள் வென்று வாகை சூடினர்.

ஆனால் இன்று அந்த ஒற்றுமை சீர்குலைந்து மீண்டும் நாம் பலவற்றையும் இழந்து வருவது வேதனைக் குரியது என தமதுரையில் ஓம்ஸ் தியாகராஜன் குறிப்பிட்டார். இப்படியே போனால் மீண்டும் பலவற்றை இழந்து பின்தங்கி விடுவோம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற மலே சிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின் விலாயா மாநில நிகழ்வில் இக்கூற்றினை அவர் முன்வைத்தார். விலாயா அரிமா தலைவர் ஜேம்ஸ் செல்வராஜ் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். முன்னதாக விலாயா நிகழ்வினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாநிலத் தலைவர் ஜேம்ஸ் செல்வராஜ் மற்றும் அவர்தம் செயற்குழு உறுப்பினர்களை வெகு வாகப் பாராட்டினார். ஏறக்குறைய 200 உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார். ‘அறம் செய விரும்பு’ எனும் கோட்பாட்டைக் கடைப்பிடித்து உறுப்பினர்களாகியிருக்கும் அனைவரும் எந்தவோர் எதிர்பார்ப்பும் இன்றி சேவையாற்ற வேண்டும் என அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார். காலம் கனிய இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் சாத்தியமும் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் அரிமா இயக்கத்தின் துணைத் தலைவர் டத்தோ பாராட் மணியம், ஆலோசகர் டத்தோ எஸ்.எம். பெரியசாமி, உதவித் தலைவர்கள் டத்தோ சோதிநாதன், டத்தோ முருகேசன், டத்தோ பேசில், தலைமைச் செயலாளர் அ.பிரகாஷ் ராவ், பொருளாளர் கருப்பையா, தகவல் பிரிவுத் தலைவர் மணிவண்ணன், மகளிர் தலைவி திருமதி சிவபாக்கியம், அரிமா மாநிலப் பொறுப்பாளர்கள் டாக்டர் கன்னியப்பன், டத்தோ கனகராஜா, நாகமுத்து ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் தொழிலதிபர் டத்தோஸ்ரீ பாராட் ராம், டத்தோஸ்ரீ சிவலிங்கம், தொழிலதிபர் டத்தோ சைமன், சிவாஜி கலைமன்றத் தலைவரும் இயக்குநருமான விஜயசிங்கம், சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன், மலாயா பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் தலைவரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் கிருஷ்ணன் மணியம் உட்பட இதர பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =