ஒரு கரும்பின் விலை ரூ.20- வயலில் பேனர் வைத்த விவசாயி

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் பொங்கல் கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் வியாபாரிகள், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு கரும்பு விலை ரூ.20 என நிர்ணயம் செய்து வயலிலேயே விவசாயி பேனர் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் குளித்து விட்டு உழவர்கள் புத்தாடை அணிந்து புது அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பொங்கல் பண்டிகையின் முக்கிய இடத்தைப் பிடிப்பது கரும்பு ஆகும்.

தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கரும்பு மட்டும் 500 முதல் 700 ஏக்கர் வரை பயிரிடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பொங்கல் கரும்பு விற்பனை மந்தமாக காணப்பட்டதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு சாகுபடி பரப்பளவு குறைந்த அளவே நடைபெற்றது. இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்து மழை பெய்ததால் சாகுபடி செய்த கரும்புகள் சாய்ந்தன.

இதையடுத்து விவசாயிகள் நான்கு அல்லது ஐந்து கரும்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி பராமரித்து வந்தனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தற்போது விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்வதற்காக வியாபாரிகளும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.11-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு விவசாயிகள் ரூ.15-க்கு மேல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த ஆண்டு கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். விவசாயிகளிடம் இருந்து முன்கூட்டியே கரும்புகளை கொள்முதல் செய்வதற்கான பணிகளில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதே போல் ரே‌‌ஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும் அதிகாரிகள், கூட்டுறவு சங்கத்தினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால் அவர்கள் 15 ரூபாய்க்கும் குறைவாக கேட்பதால் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை, காட்டூர், துறையுண்டார் கோட்டை, வரவு கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான ஏக்கர்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அப்படி செய்த விவசாயிகள் அனைவரும் சாலையோரங்களில் சில கரும்புகளை கொண்டுவந்து வைத்து சாலையில் வரும் வியாபாரிகளுக்கு தங்கள் வயலில் கரும்பு விற்பனைக்கு உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் வழிநெடுக வைத்துள்ளதை காணமுடிகிறது.

வரவு கோட்டை பகுதியில் ஒரு விவசாயி தனது வயலில் கரும்பு விற்பனைக்கு தொடர்பாக ஒரு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதில் ஒரு கரும்பு ரூ.20 என விலை நிர்ணயம் செய்து அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி வினோத் கூறுகையில், ‘‘நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து வருகிறேன். ஒரு ஏக்கருக்கு கரும்பு விதை ஆட்கள் கூலி, வாடகைக்கு தண்ணீர் பாய்ச்சுவது என ரூ.70 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. இதில் பெரும்பாலான விவசாயிகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தான் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது முதல் பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்ய வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் விலை குறைவாக கேட்கிறார்கள். இதனால் நான் எனது வயலில் கரும்பு ஒன்று ரூ.20-க்கு வாங்கிக் கொள்ளலாம் என்பதை தெரிவிக்கும் வகையில் பேனர் வைத்துள்ளேன். ரே‌‌ஷன் கடைக்கு கொள்முதல் செய்வதற்காக வருகிறார்கள். அவர்களும் குறைவாகத்தான் கேட்கிறார்கள். 15 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவுதான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க இன்னும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here