ஒப்பந்த மருத்துவர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்ல முனைப்பு

நமது ஒப்பந்த மருத்துவர்களை அரசு நடத்திய விதம் ஏளனத்துக்குரிய தாகும். இந்த வார்த்தைகள் ஒரு பண்பட்ட பெரியவரின் சொற்களாகும். பெரும்பாலான ஒப்பந்த மருத்துவர்கள் கோவிட்டை எதிர்கொண்டு நமது மக்களுக்குச் சிகிச்சை அளித்த மகத்தான பணியில் ஈடுபட்டவர்களாவர். கடந்த ஆகஸ்டு மாதம் தென்கிழக் காசிய குளோப் செய்தி நிறுவனம் ஒன்று , இந்த ஒப்பந்த மருத்துவர்கள் 2016இல் இருந்து நிதிப் பிரச்சினையில் உழன்று கொண்டு, துன்பத்தை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. கோவிட்-19 நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தபோது, பெரும்பாலான ஒப்பந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தள்ளப்பட்டு, கடும் துன்பத்தை அனுபவித்த பின்னர், வாழ்க்கையை வெறுத்து ‘ஹர்த்தால் ஸ்டிரைக்’ எனும் அமைதி மறியலில் குதிக்க நேர்ந்தது. கடந்த ஜூலை மாதம், சுங்கை பூலோ மருத்துவமனைக்கு எதிரே பல ஒப்பந்த மருத்துவர்கள் கருப்புச் சீருடை அணிந்து, கையில் தட்டிகளை ஏந்தி, நிரந்தர மருத்துவர்கள் போன்று தாங்களும் நடத்தப்பட வேண்டுமென்று அமைதியான முறையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியதைப் பலரும் கண்டு அவர்களுக்காக அனுதாபப் பட்டோம். அவர்களின் தட்டிகளில் ‘சரி சமமான சம்பளம்‘, சரி சமமான உரிமை, சரி சமமான வாய்ப்பு கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றிற்குக் கீழே, சிறிய எழுத்துகளில் ‘ஹர்த்தால் கொண்டிரேக் டாக்டர்ஸ்’ எனும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் கோவிட் தனிமைப்படுத்தும் மையங்களில் பணியாற்றிய 8, 000 மருத்துவர்களும் அந்த அமைதி மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர், ஏதாவது நல்ல முடிவு எடுக்கப்பட்டதா என்றால், இல்லையென்ற பதிலே வருகிறது. ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சினைகள் யாவும் மறைவான இடத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதாகக் கிண்டலாகக் கூறப்படுகிறது. நெகிரி செம்பிலானில் கோவிட் தனிமைபடுத்தப்பட்ட மையங்களில் பணியாற்றிய மருத்துவர்களில் 70லிருந்து 80 விழுக்காட்டினர் ஒப்பந்த மருத்துவர்களாவர். அவர்கள் 12 மணி நேரம் ஓய்வின்றி வேலை செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் வேலையின் காரணமாக அலுத்துப் போவதால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும் வேலை, வேலைதான் என்றும் குடும்பத்துக்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் ஒருவர் குறிப்பிட்டார். ஒப்பந்த மருத்துவர்களின் அமைதி மறியலுக்கு முன்னர், கடந்த ஜூனில். சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்.ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தர மருத்துவர்களாக நியமிக்க முடியாத காரணத்தை விளக்கியிருந்தது. அரசு மருத்துவமனைகளில் காலி இடங்கள் குறைவாகவே இருப்பதுதான் அதற்கு முக்கிய காரணமாகும். அதனைச் சுருங்கச் சொல்லப் போனால், தற்போது உங்களை நிரந்தரப் பணியில் அமர்த்த முடியாத நிலையில் காலியிடங்கள் இல்லை என்பதேயாகும். அதன் காரணமாக ஜனவரியில் இருந்து ஜூலை வரை சிலாங்கூரில் 163 மருத்துவர்கள் வேலையிலிருந்து விலகியுள்ளனர். அக்டோபர் 6ஆம் தேதி இணையதள பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ஒப்பந்த மருத்துவர்கள் ‘ஹர்த்தால் டாக்டர் கொண்ட்ராக்’ மருத்துவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் ஆனால் அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதும் கொடுமையானது என்று குறிப்பிட்டுள்ளது. அது பற்றிக் குறிப்பிட்ட மூத்த மருத்துவர் ஒருவர், இது மிகவும் கொடுமையானது என்றும் சில ஒப்பந்த மருத்துவர்கள் தொடர்ந்து 33 மணி நேரம் ஓய்வின்றி உழைக்க வற்புறுத்தப்பட்ட தாகக் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்பந்த மருத்துவர்களின் விவகாரம் குறிப்பிடாததை அடுத்து, பல ஒப்பந்த மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்ய முனைந்திருப்பதாக ஓர் இணையதள பத்திரிகை நவம்பர் 5ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. பட்ஜெட்டில் 10,000 ஒப்பந்த மருத்துவர்களின் பதவிக் காலம் மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைப் பெரும்பாலான ஒப்பந்த மருத்துவர்கள் வரவேற்பதாக இல்லை. இம்மாதிரியான அதிருப்தி மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் 2016 முதல் 23,977 மருத்துவர்களில் வெறும் 789 ஒப்பந்த மருத்துவர்கள் மட்டுமே அரசின் நிரந்தர வேலைகளில் நியமிக்கப்பட்டிருப்பதாக மலேசிய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது. எம்எம்ஏவின் தலைவர் டாக்டர் கோ கார் சாய் கூறும் போது, ஒப்பந்தம் காலாவதியான மருத்துவர்கள், தாராளமாக வெளிநாடு செல்லலாம் என்று தெரிவித்தார். ஆனால், பல மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய பின்னரே வெளிநாட்டுக்குச் செல்ல விரும்புகின்றனர். இதில் சம்பளம் பெரிய பிரச்சினையாக இல்லை. ஒப்பந்த மருத்துவர்களை அரசு நடத்தும் விதம்தான் அதில் முக்கியமாகத் தெரிகிறது.பட்ஜெட்டில் தங்களது விவகாரம் விவாதிக்கப் படவில்லை என்பதால், ஒப்பந்த மருத்துவர்கள் மேலு மொரு அமைதி மறியலை நடத்தவிருப்பதாகத் தெரிகிறது. அரசு எங்களை மதிப்பதாகத் தெரியவில்லை. கோவிட் நோய்க்கு சிகிச்சை அளிக்கவே தங்களைப் பகடைக் காயாக அரசு பயன்படுத்தியதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர் என்று தங்களின் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − three =