ஏஜியின் அறிவிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது

0

டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ பற்றிய சட்டத்துறைத் தலைவரின் அறிவிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது.பிரபல வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி அப்துல்லா அது பற்றிக் குறிப்பிட்டபோது, டோமி தோமஸ் தமது முடிவை மட்டுமே அறிவித்திருந்தார். ஆனால், அது அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய வில்லை என குறிப் பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, வீடியோவில் உள்ள நபர்களின் முக அடையாளம் தெளிவாக இல்லாததால், தாம் வழக்கைப் பதிவு செய்யப் போவதில்லை என டோமி அறிவித்திருந்தார்.
அதனைக் குறிப்பிட்ட ஹனிஃப் கத்ரி, அந்த வீடியோ பதிவு முதன்முதலில் வெளிப்பட்டபோது, சந்துபோங் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் ஹாஸிக் அஸிஸ், அதில் தம்மோடு இருப்பவர் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி என்பதை ஒப்புக் கொண்டார்.
வீடியோவில் உள்ளவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட மாட்டாது என டோமி குறிப்பிட்டபோது, ஹாஸிக்கின் ஒப்புதல் வாக்குமூலத்தின் மீது எவ்வகையான நடவடிக்கையை அவர் எடுக்கப் போகிறார்?
நிந்தனை வழக்கில் கிரிமினல் குற்றச்சாட்டை ஹாஸிக் மீது அவர் சுமத்தப் போகிறாரா என்றும் ஹனிஃப் கேள்வி எழுப்பினார்.
ஓரினப்புணர்ச்சி என்பதும் குற்றமாகும். அது இருவரின் உடன்பாடோடு நடந்திருந்தாலும் ஹாஸிக் மீது குற்றம் சுமத்தலாமே?
அதே சமயத்தில் பாலியல் வீடியோவை விநியோகித்தவர்கள் மீதும் குற்றம் சுமத்த வழி இருப்பதையும் ஹனிஃப் சுட்டிக் காட்டினார். அவர்கள் மீது திட்டமிட்ட சதி அல்லது ஆபாச வீடியோவை கெட்ட நோக்கத்தோடு விநியோகித்ததாகக் குற்றம் சாட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அது பற்றிக் குறிப்பிட்ட நஜிப் ரசாக், அஸ்மின், ஹாஸிக் மீது வழக்குத் தொடுக்கலாம், பொய்ப் புகாரை அளித்த ஹாஸிக் மீது போலீஸ் வழக்குத் தொடுக்கலாம், பாலியல் வீடியோவை விநியோகித்தவர்களின் மீதும் கிரிமினல் குற்றம் சுமத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நஜிப்பின் கருத்துக்குப் பதிலளித்த குற்றவியல் வழக்கறிஞர் என்.சிவானந்தன், அஸ்மின், ஹாஸிக் மீது சிவில் வழக்கைத் தொடுக்கலாம் என்றும் வீடியோவில் உள்ளவர்களின் முகம் தெளிவாக இல்லாததால், ஹாஸிக் பொய்யான புகாரை அளித்தார் என கருத முடியாது. யார் வேண்டுமானாலும் போலீஸ் புகாரை அளிக்கலாம், ஆனால், அதன் உண்மைத் தன்மையைப் காவல் துறையே முடிவு செய்ய வேண்டும்.
வீடியோவை விநியோகித்தவர்கள் மீது ஆதாரம் இருப்பதால், அவர்கள் மீது டோமி தோமஸ் வழக்கைப் பதிவு செய்யலாம்.
அதற்கும் ஆதாரம் இல்லையென மறுத்தால், பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டிவரும்.
சம்பந்தப்பட்டோர் மீது ஆதாரங்கள் இருப்பதால் டோமி தமது சொந்த முடிவின்படி அதில் நடவடிக்கை எடுப்பதே சரியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 11 =